சில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவையாக அவை உள்ளன.
தாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஒன்றைவிட மற்றொரு தாவரம் அதிக தாக்குபிடிக்கும் தன்மை கொண்டது என எப்படி அமைகிறது?
இதற்கான பதிலை கண்டறிவதற்கு தாவரவியலாளரும் பிபிசி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வோங் முயற்சி மேற்கொண்டார். அப்போது நமது பூமியின் கடினமான தாவரங்களின் வினோதமான மற்றும் ஆச்சர்யத்துக்குரிய உண்மைகளை அவர் கண்டறிந்தார்.
1.பழங்கால பயிர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும்
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற கடினமான இரண்டு தாவர வகைகளை ஜெர்மனி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.
சுவிட்சர்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கற்பாசிகள் (Lichens) மற்றும் நீலப்பசும் பேக்டீரியா (Cyanobacteria) என்ற இரண்டு உயிரிகளாக இருப்பதால் இதில் ஆச்சர்யம் ஏதும்இல்லை.
இந்த ஆதிகால தாவரங்கள் அதில் உயிர்வாழ முடியுமா என பரிசோதனை செய்வதற்காக - கடுமையான சூரிய வெப்பம், வெப்ப நிலையில் ஏற்ற இறக்கங்கள், அதிக அளவிலான உலர்ந்த நிலை மற்றும் குறைவான காற்றழுத்தம் - போன்ற செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.
என்ன முடிவு கிடைத்தது? இந்தத் தாவர இனங்கள் உயிர் பிழைத்திருந்தது மட்டுமின்றி, ஒளிச் சேர்க்கை செய்தல் மற்றும் வழக்கமான தாவர செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.
2.நீடித்த ஆயுளுக்கு குளோனிங் செய்வதுதான் முக்கியம்
கிழக்கு கலிபோர்னியாவில் உள்ள பிரிஸ்டல்கோன் (bristlecone) பைன் மரம் தான் அதிக வயதான, வாழும் நிலையில் உள்ள தனிப்பட்ட மரமாகக் கருதப்படுகிறது. 2012ம் ஆண்டு கணக்கிட்டபடி அந்த மரத்துக்கு 5,062 வயது என கூறப்பட்டது.
ஆனால் இன்னும் அதிகமான ஆயுளைப் பெறுவதற்கு புத்திசாலித்தனமான மரங்கள் தங்களுக்கான வழிமுறையைக் கையாள்கின்றன: குளோனிங் செய்து கொள்கின்றன.
ஆம், அந்த மரங்கள் தங்களுக்குள்ளாக குளோனிங் செய்துகொண்டு, அதே வேர் முறைகளின் மூலம் இணைக்கப்பட்ட மரபணு ரீதியாக ஒரே மாதிரியான குளோனிங் வாழ்விடங்களாக உருவாகியுள்ளன.
இந்த குளோனிங் வாழ்விடங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உயிர்வாழ்ந்திட முடியும் - அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் உள்ள பேண்டோ மரங்கள் 80,000 ஆண்டுகள் பழமையானது என்றும், கலிபோர்னியாவில் ஜுருபா ஓக் சுமார் 13,000 ஆண்டு பழமையானவை என்றும் கருதப் படுகிறது.
3.`வாழும் கற்கள்' ' அதிக செம்மையான பயிர்களை உருவாக்க முடியும்
கற்குமிழிகள் `வாழும் கற்கள்' என்று கருதப் படுகின்றன. இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் ஒரு கற்குமிழியைப் பார்க்க வேண்டும்: அவை வாழும் இனமாக இருப்பதைக் காட்டிலும் கூழாங்கற்களைப் போல தோற்றமளிக்கும்.
ஆனால் தெற்கு ஆப்பிரிகாவைச் சேர்ந்த நம்ப முடியாத இந்த உயிரினம் உண்மையிலேயே அங்கீகரிக்கப்படாத தாவர இனமாக உள்ளது. அதிக செம்மையான தாவரங்களை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது.
மிக மோசமான வறட்சி சூழ்நிலைகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் உயிர்வாழும் தன்மை கொண்டதாக இந்தத் தாவரங்கள் உள்ளன. கற்களைப் போன்ற தோற்றத்தால், பிற உயிரினங்களுக்கு உணவாகாமல் தப்பிவிடுகிறது.
பெரும்பாலும் நிலத்துக்கு அடியில் வளரக் கூடியவை என்றாலும், ஒளி ஊடுருவக் கூடிய மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் சூரிய ஒளி உள்ளே செல்கிறது - அது சக்தியாக மாற்றப் படுகிறது.
பூமிப் பரப்புக்கு மேலே உள்ள பிரகாசமான ஒளி மற்றும் பூமிப் பரப்புக்கு கீழே உள்ள குறைந்த ஒளி என இரண்டு சூழ்நிலையையும் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளும் கற்குமிழிகளின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் செம்மையான தாவரங்களை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
4. பருவநிலை மாற்றத்தால் காபிக்கு பதிலாக கோகோ பயன்பாட்டுக்கு வரும்
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, நாம் அதிகம் பயன்படுத்தும் காபிக் கொட்டை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், அதிகம் தாக்குபிடிக்கும் திறன் கொண்ட வேறொரு பயிர் அதற்கு மாற்றாக உருவாக தயாராக இருக்கிறது. அது கோகோ.
மத்திய அமெரிக்காவில் சமீப காலமாக, அராபிக்கா காபி இனம் அதிக வெப்பத்தால் உயிர்வாழ முடியாமல் எப்படி போராடுகிறது, இலைகளில் நோய் தாக்குகிறது, அந்த இனம் எப்படி அழிந்து கொண்டிருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஆவணப் படுத்தியுள்ளனர்.
வெப்ப நிலை உயரும் போது, தாழ்வான பகுதிகளில் உள்ள பயிர்களில் காபியின் தரம் குறைந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே நிகாரகுவா, ஹோண்டுராஸ், எல் சால்வடோர் விவசாயிகள் ஏற்கெனவே கோகோ பயிருக்கு மாறிவிட்டனர் - அது வெப்பமான பருவநிலையிலும் தாக்கு பிடித்து வளரக் கூடியதாக உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் உங்களுடைய காலை நேர காபி மெசினில் காபிக்கு பதிலாக சாக்லெட் பானம் வருவதாக இருந்தால் நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம்.
5.காட்டுத் தீயில் பரவும் சில மரங்கள்
யூகலிப்டஸ் மரங்கள் கடினமானவை மட்டுமல்ல - அவை ஆபத்தானவையும் கூட.
அவை பைரோபைட்ஸ் (pyrophytes) என்ற இனத்தைச் சேர்ந்தவை. பழங்கால கிரேக்கத்தில் இதை `நெருப்பு மரம்' என குறிப்பிடுவர்: தீயை தாங்கும் என்பது மட்டுமன்றி, சில நேரங்களில் அவை பரந்து வளரவும், உயிர்வாழவும் அது தேவைப்படுகிறது.
இயற்கையாக தீயை உருவாக்கக் கூடிய இந்த மரங்கள், எரியக் கூடிய எண்ணெய் மற்றும் கோந்துகளை உற்பத்தி செய்கிறது. பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத் தீயை உருவாக்கக் கூடிய வகையில் காய்ந்த இலைகளை உதிர்க்கும், மரம் எளிதில் தீ பிடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
தீ பிடிக்கும் போது யூகலிப்டஸ் அல்லது சில வகை பைன் மரங்கள் தாக்கு பிடித்து தப்பிக்கும்.
அப்போது உருவாகும் வெப்பம் விதைகளின் முளைப்புத் திறனை தூண்டுகிறது. மற்ற தாவர இனங்கள் உயிர்வாழ திணறும் போது, இந்த செடிகள் சாம்பலான தரையில் இருந்து செழிப்பாக வளரக் கூடியவை.
பெரிய மரங்கள் எரியும்போது காட்டில் கிடைக்கும் கூடுதல் ஒளியை இந்தச் செடிகள் கிரகித்துக் கொள்ளும்.
6.அணுசக்தி சூழலுக்கு தகவமைப்பு செய்து கொள்ளும்தாவரங்கள்
கதிரியக்கத்தால் வாழும் செல்கள் பாதிக்கப்படும், டி.என்.ஏ. சேதாரம் ஆகும். எனவே அணுசக்தி விபத்துக்குப் பிறகு தாவரங்கள் உயிர் வாழ்வது கடினம் என்று நீங்கள் நினைக்கக் கூடும்.
ஆனால், 1986 செர்னோபில் பேரழிவின் பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், எல்லா சமயங்களிலும் அப்படி நடப்பதில்லை என கண்டறிந்துள்ளனர்.
ஆளி விதை செடிகள் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை வைத்து ஆராய்ச்சி செய்ததில், பாதிப்பு அடைந்த சுற்றுச்சூழல் நிலையிலும் செழிப்பாக வளரும் வகையில் இவை தங்களை தகவமைப்பு செய்து கொள்கின்றன என்பதைக் கண்டறிந்தனர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமிக் கோளத்தில் கதிரியக்க அளவு அதிகமாக இருந்தபோதே, அணுசக்தி பாதிப்பு நிலைக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ளும் தன்மை உருவாகியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
7. 32,000 ஆண்டுகள் வரை உயிர்ப்புடன் இருக்கும்விதைகள்
அழிந்து போய்விட்ட தாவர இனங்களை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அணில்கள் 32,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த விதைகளைக் கொண்டு இந்தத் தாவர இனத்தை உருவாக்கினர்.
குளிரான பருவநிலையில் வளரும் silene stenophylla என்ற தாவரம் ஐஸ் யுகத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. சைபீரியாவில் உறைந்து போன நதிக் கரையில் புதைந்து போயிருந்த விதைகளைக் கொண்டு இந்தத் தாவர இனத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.
அந்த விதைகளில் இருந்து திசுக்களை எடுத்து, புதிய தாவரங்களை வளரச் செய்தனர். பிறகு அவை தாங்களாகவே பெருகிவிட்டன.
பனிப் பிரதேசங்களில் மிஞ்சியுள்ள பொருள்களில் இருந்து, அழிந்து போய்விட்ட தாவர இனங்களை உருவாக்குவதில் இது முதலாவது முயற்சியாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Post a Comment
Post a Comment