தேவையற்ற கைதுகளை உடன் தடுத்து நிறுத்துக!




“நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம்கள் தார்மீக வருத்தம் தெரிவித்து தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு வழங்கி வரும் தற்போதைய சூழ்நிலையில் அநாவசியமான கைதுகள் இடம்பெறுவது வேதனைக்குரியது. இதனை உடன் தடுத்து நிறுத்துங்கள்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் முஸ்லிம் அரசியல்வாதிகள்.
இன்று காலை ஜனாதிபதியின் இல்லத்தில் நடந்த சந்திப்பின்போதே ஜனாதிபதியிடம் இந்த வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர்களான பௌசி, தௌபீக், மஹ்ரூப், பைசர் முஸ்தபா உள்ளிட்டோரும், பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
“தேவையற்ற கைதுகள் நிறுத்தப்பட்டு குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பில்லாதவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை இவ்வாறான கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
சில ஊடகங்கள் போலியான பிரசாரங்களைச் செய்து வருகின்றனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது விதிக்கப்படும் கெடுபிடிகளால் நிலைமை மோசமடையாமல் இருக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என்று இதில் கலந்துகொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக வலியுறுத்தினர்.
சில ஊடகங்கள் செய்துவரும் போலியான பிரசாரங்கள் குறித்து இங்கு கவலை வெளியிட்ட ஜனாதிபதி, அப்படியான ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதுடன் சாதாரண முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவதை தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.