நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் மோசமான பாலியல் ரீதியான தாக்குதல்கள், அத்துமீறல்கள் மற்றும் கேலிப்பேச்சுகள் இடம்பெற்று வந்துள்ளதாக புதிய சுயாதீன விசாரணையொன்று தெரிவிக்கிறது.
இது தொடர்பில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் திரேவர் மெயிலார்ட் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவிக்கையில், இது சகிப்புத்தன்மை காண்பிக்க முடியாத தீவிர நிலைமையாகும் எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற எல்லைக்குள் பணியாற்றும் 14 பேர் தாம் அங்கு பாலியல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்த 120 பக்க விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
அத்துடன் ஒரே மனிதரால் 3 மோசமான பாலியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
மேற்படி குற்றச்சாட்டுக்குள்ளான தனிநபர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாக தான் நம்புவதாக திரேவர் மெயிலார்ட் கூறினார்.
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா அர்டேர்ன் இது தொடர்பில் கலந்துரையாட திரேவர் மெயிலார்ட்டுடனும் ஏனைய கட்சி உறுப்பினர்களுடனுமான கூட்டமொன்றை கூட்ட அழைப்பு விடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்கள் கௌரவத்துடன் நடத்தப்படும் இடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பாராளுமன்ற சபாநாயகரின் நோக்கமாகவுள்ளதாக அவர் குறிப் பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நடந்த அநீதி குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வது அவர்களது சொந்த விருப்பம் என அவர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment