“சமீபகாலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டின் பலபகுதிகளில் தோற்றிவிக்கப்பட்ட அசம்பாவிதங்களும், கருத்துருவாக்கங்களும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களைப் பகடைக்காயாக்கும் அறிகுறிகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. இச்சம்பவங்கள் அரசை ஆட்டங்காணச் செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் கருதவேண்டியுள்ளது. இவற்றில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின்பிடியில் கொண்டு வரப்படவேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உடன் இழப்பீடுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“உயிர்த்த ஞாயிறன்று காட்டுமிரண்டித்தனமாக அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை முஸ்லிம் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர். இந்தச் சம்பவங்கள் நடைபெற்று 20 நாட்களுக்குப் பின்னர் அமைதி மெல்ல திரும்பிக் கொண்டிருந்த நிலையில் முஸ்லிம் மக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட சம்பவங்கள் ஒரு திட்டமிடப்பட்ட – அரசை நிலைகுலையச் செய்யும் அரசியல் பின்புலத்தைக் கொண்ட ஏற்பாடுகளாகவே இருக்கின்றன.
இச்சம்பவங்களின்போது உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் வழிபாட்டுத்தலங்கள், இல்லிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பலவும் சேதமாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலைமைகள் தொடர்ந்தும் ஏற்படுமானால் நாடு பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இதனை சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இதேநேரம், “ஓருநாடு என்ற வகையில் நிலையான சமாதானத்தைப் பேணவேண்டிய சந்தர்ப்பத்தில் இலங்கை இருக்கின்றது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து துவேஷத்தை நிராகரிப்பது முக்கியம்” என்று ஐ.நாவும் வலியுறுத்தி உள்ளமையும் கருத்தில்கொள்ள வேண்டியவை.
நாட்டில் நடந்து முடிந்த சம்பவங்களின் காரணமாகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை உடனே கட்டியெழுப்ப வேண்டியது அவசியமானது. இதனைச் செய்யவேண்டுமாயின் அனைத்துத் தரப்பினரும் அதாவது பொதுமக்கள் உள்ளிட்ட அரசியல் மற்றும் இன, மத சக்திகள் அர்ப்பணிப்போடு ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமாகின்றது. தவறும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் அதலபாதளத்தில் விழுவது தவிர்க்கமுடியாதது ஆகிவிடும்.
தொடர்ந்தும் இவ்வாறான அசாதாரண நிலைமைகள் தொடருமானால் சாதாரண மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே, இனவாத சக்திகள் முடக்கப்படவும் நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை நிறுத்தப்படவும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒரணியாக இணைந்து செயற்பட வேண்டும்.
இதேநேரம் குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் சக்திகள் குறித்து நாம் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம் மக்கள் நிதானமாகவும் அவதானமாகவும் நடந்துகொள்ள வேண்டிய தருணம் இது” – என்றுள்ளது.
Post a Comment
Post a Comment