உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்




12 ஆவது உலகக்கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடக்கிறது. இதற்கான 15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாம் இந்திய கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாமிற்கு தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரோகித் சர்மா, சிகர் தவான், கீதர் யாதேவ், மகேந்திரசிங் தோனி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, குல்தீப் யாதேவ், ஷால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், விஜேய் சங்கர், கே. எல். ராகுல், தினேஸ் கார்த்திக் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படடுள்ளர்.
இதேவேளை,போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் ஆகியோரை உள்ளடக்கிய உலகக்கிண்ண அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள்  இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த குழுவில் டேவிட் வோர்ணர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஹாண்ட்ஸ்கொம் மற்றும் ஹஸில்வூட் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்கவில்லை.
இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் 15 பேர் கொண்ட 2019 ஆண்டுக்கான உலக்கிண்ண குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேரடங்கிய அவுஸ்திரேலிய குழாம் விபரங்கள் வருமாறு,
அவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பிஞ் தலைமை தாங்குகின்றார், அவருடன் டேவிட் வோர்ணர், ஸ்டீபன் ஸ்மித், உஷ்மன் கவாஜா, ஷோர்ன் மார்ஷ், கிளன் மெக்ஷ்வெல், மார்க்கஸ் ஸ்டெய்னிஸ், விக்கெட் காப்பாளராக அலக்ஸ் கேரி, பட் கெம்மின்ஸ், மிட்சல் ஸ்ராக், ஜெயி ரிச்சட்சன், நதன் குல்ட்லர் நில், ஜேசன் பிஹர்ன்டோர்ப், அடம் ஷம்பா, நதன் லின் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. 
இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்றையதினம் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விபரம் மற்றும் இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன. 
இலங்கை அணி வீரர்கள் குறித்து எதுவும் வெளிவராத நிலையில், அஞ்சலோ மெத்தியூஸிடம் உலகக் கிண்ண அணிக்கு தலைமை தாங்குமாறு கேட்கப்பட்டதாகவும் அதனை மெத்தியூஸ் நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும் இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.