ஒப்பந்தம்





மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சுக்கும் கெனடியன் கொமர்ஷியல் கோப்போரேஷன் (Canadian Commercial Corporation) நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. 

மின்சக்தி பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக குறைந்த செலவிலான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைகளை கையாளும் முகமாக மகாவலி பொருளாதார வலயங்களுக்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகியன முன்வைத்த பிரேரணைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. 

அதற்கமைய பல பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் இவ்வகையான மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையங்களினால் 2030 ஆம் ஆண்டளவில் இந்நாட்டு மின்சார தேவையின் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்சக்தியினால் பூர்த்திசெய்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதன் முதலாவது வேலைத்திட்டம் மகாவலி வலயத்திற்குட்பட்ட மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், சூரிய படல்கள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்கலங்களைக் கொண்டு சூரிய சக்தியை சேமிக்கும் செயற்திட்டம் Canadian Commercial Corporation நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கு நீர்த்தேக்கத்தில் 500 ஏக்கர் அளவிலான இடத்தை பயன்படுத்த எண்ணியுள்ளதுடன், அந்த பரப்பளவு நீர்த்தேக்கத்தின் நூற்றுக்கு 4 சதவீதத்தைவிட குறைந்ததாகும். 

இந்த செயற்திட்டத்தை துரிதமாக நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதுடன், முதலாவதாக 10 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இந்த ஆண்டு நம்பர் மாத இறுதியில் பூர்த்தி செய்வதற்கும் 2020 செப்டெம்பர் இறுதியில் 100 மெகாவோட்ஸ் மின் உற்பத்தியை அடைவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட மற்றும் Canadian Commercial Corporation நிறுவனத்தின் ஆசிய வலயத்திற்கான பணிப்பாளர் Yvonne Chin அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க ஆகியோரும் மின்வலு, சக்திவலு அமைச்சின் அதிகாரிகளும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் David McKinnon மற்றும் Canadian Commercial Corporation நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

(ஜனாதிபதி ஊடக பிரிவு)