விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது




விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே.
அசாஞ்சேவை கைது செய்த காவல்துறை, அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்தனர்.
சர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார்.
ஆனால் இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ட்விட் செய்தியில், சர்வதேச சட்டவிதிகளை மீறி அசாஞ்சேக்கு தஞ்சம் வழங்கப்பட்டதை சட்டவிரோதமாக ஈகுவேடார் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனின் உள்துறை செயலர் சஜித் ஜாவிட் வெளியிட்ட ட்விட் செய்தியில், ''ஜூலியன் அசாஞ்சே தற்போது போலீஸ் காவலில் உள்ளார் என்பதை நான் உறுதி செய்கிறேன். பிரிட்டனின் சட்டநடைமுறையை அவர் எதிர்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
ரகசிய ஆவணங்கள் மற்றும் படங்களை பெறுவதற்கு மற்றும் பதிப்பிப்பதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் நிறுவனத்தை ஜூலியன் அசாஞ்சே நிறுவினார்.
Julian Assangeபடத்தின் காப்புரிமைREUTERS
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்க ராணுவத்தினரால் இராக்கில் மக்கள் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோபதிவை வெளியிட்டதையடுத்து இந்நிறுவனம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது.
அசாஞ்சே வாழ்க்கையில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்தது என்ன?
ஆகஸ்ட் 2010 - சுவீடன் அசாஞ்சேவுக்கு கைது ஆணையை பிறப்பித்தது. பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் பலவந்த குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அசாஞ்சே கூறினார்.
டிசம்பர் 2010 - லண்டனில் அசாஞ்சே கைது செய்யப்பட்டார். இரண்டு முறை பிணையில் வெளிவந்தார்.
மே 2012 - அசாஞ்சே அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை எதிர்கொள்ள சுவீடனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பிரிட்டன் உச்ச நீதிமன்றம் கூறியது.
ஜூன் 2012 - லண்டனில் ஈகுவடார் தூதரகத்தில் நுழைந்து அசாஞ்சே தஞ்சம் கோரினார்.
ஆகஸ்ட் 2012 - ஈகுவடார் தூதரகம் அசாஞ்சேவுக்கு தஞ்சம் தந்தது. மேலும் அசாஞ்சே ஒப்படைக்கப்பட்டால் அவர் மீது மனித உரிமைகள் மீறப்படும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்தது.
ஆகஸ்ட் 2015 - பாலியல் குற்றங்கள் தொடர்பான சில குற்றச்சட்டுகள் குறித்த விசாரணையை காலம் கடந்தால் நேரமில்லை என கூறி கைவிட்டது ஆனால் பாலியல் வல்லுறவு குறித்த குற்றச்சாட்டை மட்டும் அசாஞ்சே எதிர்கொள்ள வேண்டியிருந்தது
அக்டோபர் 2015 - ஈகுவடேரியன் தூதரகத்துக்கு வெளியே அதிகாரிகள் இனி இருக்கமுடியாது என லண்டன் பெருநகர காவல்துறை அறிவித்தது.
பிப்ரவரி 2016 - சட்டத்திற்கு புறம்பான வகையில் 2010லிருந்து தன்னிச்சையாக பிரிட்டன் மற்றும் சுவீடன் அதிகாரிகளால் அசாஞ்சே காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என ஐநா அமர்வு கூறியது.
மே 2017 - சுவீடன் அரசு வழக்குரைஞர்களின் இயக்குநர் அசாஞ்சே மீதான பாலியல் வல்லுறவு குறித்த விசாரணை கைவிடப்பட்டதாக தெரிவித்தார்.
ஜூலை 2018 - அசாஞ்சேவின் விதி பற்றி பேச்சுவார்த்தை நடந்துவருவதாக பிரிட்டனும் ஈகுவடாரும் உறுதி செய்தன.
அக்டோபர் 2018 - லண்டனில் ஈகுவடார் தூதரகத்தில் அசாஞ்சேவுக்கு பிரத்யேக விதிகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து ஈகுவடார் அரசு மீது அசாஞ்சே சட்ட நடவடிக்கை துவங்கினார்.
டிசம்பர் 2018 - ஈகுவடார் தூதரத்தை விட்டு அசாஞ்சே வெளியேறும் தருணம் வந்துவிட்டது என ஈகுவடார் அதிபர் கூறியதொரு ஒப்பந்தத்தை அசாஞ்சே வழக்குரைஞர் நிராகரித்தார்.
பிப்ரவரி 2019 - ஈகுவடார் அசாஞ்சேவுக்கு தஞ்சம் வழங்கியதை முடிவுக்கொண்டுவர முனைந்துவருவதாக அச்சம் எழுந்த நிலையில் ஆஸ்திரேலியா அசாஞ்சேவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கியது.
ஏப்ரல் 2019 - 2012-ல் பிடி ஆணை வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய தவறிவிட்டார் எனக்கூறி அசாஞ்சேவை கைது செய்தது லண்டன் பெருநகர காவல்துறை.