பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இதற்கான நியமனம் கடிதம் வழங்கப்பட்டது.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து உடனடியாகப் பதவி துறக்குமாறு இருவருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதன்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜிநாமா செய்தார். எனினும், பதவி துறப்பதற்கு பொலிஸ்மா அதிபர் மறுப்புத் தெரிவித்தார் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பதில் பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதி அதிரடியாக நியமித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.