இலங்கையில் இன்று காலை முதல் ஏழு இடங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இலங்கையில் நடந்த குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி கடும் கண்டனம் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"நமது பிராந்தியத்தில் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை. குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்" என்று நரேந்திர மோதி மேலும் தெரிவித்துள்ளார்.
"இன்று நம் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சோகமான நேரத்தில் இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையாக, வலிமையுடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் குண்டுவெடிப்பு தொடர்பான அதிகாரபூர்வமற்ற தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டுமென்றும், சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ரணில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"புனித நாளொன்றில் நடத்தப்பட்டுள்ள இதுபோன்ற தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட இந்த கொடூரமான தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
"இலங்கையிலுள்ள உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் உண்மையிலேயே பயங்கரமானவை. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன்" என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment