நேற்று மொஹாலியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் கடைசி ஓவர் வரை பதற்றம் நீடித்தது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி இருந்தது.
அப்போது பஞ்சாப் அணியில் சாம் கரேனும், கே.எல் ராகுலும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் சாம் ஐந்து ரன்கள் எடுக்க, அடுத்து முழு கவனமும் ராகுலின் பேட்டிங் மீது சென்றது. நான்காவது பந்தை சந்தித்த ராகுல் அதை பவுண்டரி ஆக்கினார். மேலும், இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து பரபரப்பான ஆட்டத்தை பஞ்சாப் அணியின் வெற்றியாக மாற்றினார்.
ஐதராபாத் அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை 20 ஓவர்களில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் பஞ்சாப் அணி எட்டியது. பஞ்சாப் அணியின் ஆட்டக்காரர்களான கே.எல். ராகுலின் 71 ரன்களும், மயங்க் அகர்வாலின் 55 ரன்களும் அந்த அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஐதராபாத் அணியை முதலில் பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. வார்னரின் அதிரடியான 70 ரன்களுடன் ஐதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது.
ஐதராபாத் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், ஒரு சிக்சர் மூலம் 70 ரன்களை அடித்தார். மற்ற வீரர்கள் எவரும் 30 ரன்களை கூட தாண்டவில்லை.
ஒரு கட்டத்தில் 10.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், அது அந்த அணியின் பெரிய அளவில் ரன் எடுக்காதோ என்று கருதப்பட்டது.
எனினும், கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 100 ரன்களை குவித்த ஐதராபாத் அணியின் வீரர்கள், முடிவில் 151 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக கொடுத்தனர்.
போட்டிக்கு பின் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், தனது அணியின் பவுலர்களால் வார்னரின் பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இருந்தபோதிலும், நேர்த்தியாக பந்துவீசி அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் இருந்த தனது அணியின் பந்துவீச்சாளர்களையும், அதிரடியாக விளையாடிய பேட்ஸ்மேன்களையும் பாராட்டினார்.
53 பந்துகளில் 71 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் 14 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.
அடுத்ததாக களமிறங்கிய மயங்க் அகர்வாலுடன் கைகோர்த்த ராகுல், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 114 ரன்கள் குவித்தனர்.
தலா மூன்று பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களுடன் மயங்க் அகர்வால் 43 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார்.
சென்னையில் போட்டியில் சோபிக்காத ராகுல்
ஐதராபாத் அணிக்கெதிரான இந்த போட்டியில் வெற்றிபெறவில்லை என்றால் கே.எல். ராகுல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்திருப்பார். ஏனெனில், சென்னைக்கு எதிரான கடைசி போட்டியில் பஞ்சாப் விளையாடியபோது மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் 47 பந்துகளில் 55 ரன்களை மட்டுமே எடுத்தது அந்த அணியின் தோல்விக்கான காரணமாக சொல்லப்பட்டது.
அதுமட்டுமின்றி, 59 பந்துகளில் 67 ரன்களை மட்டுமே குவித்த சர்பராஸ் கானும் ராகுலோடு சேர்ந்து கடும் விமர்சனத்துக்குள்ளானார். ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாபி அணி 20 ஓவர்களில் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த போதிலும், 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சோபிக்காது விமர்சனத்துக்குள்ளான கே.எல். ராகுல், சர்பராஸை போன்றே இந்த போட்டியில் அதிக பந்துகளை சந்தித்து பெரிதும் சோபிக்காத ஐதராபாத் அணியின் டேவிட் வார்னரும், விஜய் சங்கரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதன் மூலம், ஒரு போட்டியில் வில்லனாக இருப்பவர் அடுத்த போட்டியில் ஹீரோவாகவும், நட்சத்திர வீரர் ஒருவர் அணியின் தோல்விக்கு வழிவகுப்பதும் ஐபிஎல்லில் சகஜம் என்பது தெளிவாகிறது.
Post a Comment
Post a Comment