(க.கிஷாந்தன்)
தம்முடைய ஆட்சி காலத்தில் தோட்ட தொழிலாளர்கள் கோரிய சம்பளத்தை தாம் வழங்கியதாக தெரிவித்த நாட்டின் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்கள் கேட்ட ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க கூட முடியாமல் உள்ளதாக தெரிவித்தார்.
நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 19.04.2019 அன்று காலை இடம்பெற்ற வருடாந்த ரத பவனி நிகழ்வில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஸ்ரீராந்தி ராஜபக்ஷ, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வழிபாடுகளில் ஈடுப்பட்ட பின் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றிபெறக்கூடிய நபரையே வேட்பாளராக களமிறக்குவோம். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்சித் தாவல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி, இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.
அது அவர்களுக்குள் ஏற்பட்ட சூழ்ச்சி, எனினும் அது வெளியாகிய நிலையில் அந்த விடயம் கைவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. நாங்கள் எதனையும் செய்யவில்லை. அது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை. எத்தனை வேட்பாளர்கள் வந்தாலும், புத்திசாலித்தனமான மக்கள் புத்திசாலித்தனமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள்.
நாங்கள் மக்களை நம்புகின்றோம். புதுவருடத்தில் மக்களுக்கு குளிப்பதற்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. இந்த மக்களுக்கு ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியவில்லை. எங்கள் காலத்தில் கேட்ட சம்பளத்தைக் கொடுத்தோம். அரசாங்கம் என்ற வகையில் ஆயிரம் ரூபாயை வழங்குமாறு கம்பனிகளிடம் வலியுறுத்த வேண்டும்.
அரசாங்கத்தால் அதனை செய்ய முடியாவிடின், அரசாங்கத்தினால் இயலுமான விடயம் என்ன? இந்த தோட்டப்புறங்களில் உள்ள வீதிகளை அமைத்தது யார்? இந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை அமைத்தது யார்? நுவரெலியா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தது யார்? இதுத் தொடர்பில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தது எனினும் இப்போது தெரிந்துகொண்டுள்ளனர். நுவரெலியா வைத்தியசாலையை இன்னமும் திறந்து வைக்க முடியாமல் உள்ளது. நான் அமைத்துக்கொடுத்ததை திறக்க அவர்களால் முடியவில்லை. ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் அதே நிலைமையே காணப்படுகின்றது.
எதிர்வரும் காலத்தில் மாகாண சபைத் தேர்தலே நடைபெற வேண்டும். எனினும் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறுமென எதிர்ப்பார்கப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் அதன் பின்னரே நடைபெற வேண்டும். எனினும் ஏதாவது ஒரு தேர்தல் நடைபெற வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. உள்ளுராட்சி தேர்தலில் மக்களின் தீர்ப்பு விளங்கியது தானே என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment