இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று உறுதியளித்தனர்.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, தற்போதைய நிலைவரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஜனாதிபதி இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
“இந்தக் கொடூரமான செயலுக்குப் பொறுப்பான குற்றவாளிகளையும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்களையும் கண்டறிந்து கைதுசெய்வதற்கு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்ட முடியும் என்று நம்புகின்றோம்” என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அனுபவம் வாய்ந்த, உயர் தொழிநுட்ப மற்றும் புலனாய்வு திறன்களைக் கொண்ட 08 நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்தப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஏனைய நாடுகளும் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் ஏனைய பிரதிநிதிகளும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இதன்போது தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
30 வருடங்களாக இடம்பெற்ற போரின்போதும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதும் இலங்கை புலனாய்வுத்துறை பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பயன்படும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நேற்றிரவிலிருந்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட அதிகாரங்களையும் பாதுகாப்பு படையினர் தற்போது பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று இடம்பெறக் கூடும் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், சாதாரண சட்டங்களின் மூலம் போதுமான சாட்சிகள் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையை மீளொழுங்குப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைக் கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட முடியும் என்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி கூறினார்.
சமூக ஊடகங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தத் துன்பியல் நிகழ்வு தொடர்பில் இலங்கைக்கு தமது அனுதாபங்களைத் தெரிவித்த வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நாட்டில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் பலியான அனைவருக்கும் இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment