(நன்றி: ‘தமிழன்’)
“அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா… இந்தக் காச எடுத்து சப்புங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….”
– இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிராமத்தில் வாடகைக்கு இருந்த வீட்டின் பக்கத்துக்கு வீடுகளுக்கு பண நோட்டுக்களை அள்ளி வீசியிருக்கின்றனர் தற்கொலைதாரிகள்.
கடந்த 18ஆம் திகதி இந்த வீட்டை வாடகைக்குப் பெற்ற இருவர் அந்த வீட்டில் தங்காமல் போய்விட்டு இரண்டு நாட்கள் சென்ற பின்னர் சிறு பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் எனப் பலருடன் வந்து தங்கியிருந்தபோது அவர்களில் சந்தேகம் கொண்ட வீட்டின் உரிமையாளர் அவர்களிடம் விபரம் கேட்கச் சென்றதாக தகவல். அப்போது ஒருவர் ஆயுதம் ஒன்றைக் காட்டி ஒருவரும் வாய்திறக்கக் கூடாதென எச்சரித்துள்ளார்.
என்றாலும் இந்தத் தகவல் சற்று வெளியில் கசிந்ததையடுத்து அங்குள்ள ஒருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் முறையிட்டுள்ளார். மக்களுடன் மிக நட்புடன் பழகும் இந்த உத்தியோகத்தர் இன்னும் இரு உத்தியோகத்தர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கிதாரிகள் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்த அந்த உத்தியோகத்தர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
மக்கள் பதற்றத்தில் அங்குமிங்கும் செல்ல ஆரம்பித்த நிலையில் இனி நிலைமை விபரீதமாகப் போகின்றது என்பதை உணர்ந்த துப்பாக்கிதாரிகள் பெரிய உரப்பையை வெளியில் எடுத்துவந்து அதில் இருந்த பணத்தை கட்டுக் கட்டாக வீசி கேவலமான வார்த்தைகளைக் கூறித் திட்டியுள்ளனர்.
“காட்டிக் கொடுத்த நாசமறுத்தவனுகளே மூதேசிகளா…. இந்தப் பணத்தை எடுத்து சப்பிக் கொண்டிருங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கிறோம்…” என்று கூறியபடி பணக்கட்டுகளை இவர்கள் வீசியபோதும் மக்கள் எவரும் அதனை கிஞ்சித்தும் கணக்கெடுக்காமல் தமது பாதுகாப்பைத் தேட ஆரம்பித்தனர்.
பின்னர் படையினர் வந்ததையடுத்து நிலைமை மோசமானது. சரணடையுமாறு அவர்களைப் பணித்தபோதும் அதனை செவிமடுக்காத தற்கொலைதாரிகள் குண்டை வெடிக்க வைத்துள்ளனர். புத்தம் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட வான் ஒன்றும் அங்கு இருந்துள்ளது.
முக்கிய தாக்குதல் ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டு வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. இவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் கூறுகின்றனர்.
(நன்றி: ‘தமிழன்’)
Post a Comment
Post a Comment