– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா
“மதுஷ் சில விடயங்களை செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பல தடவைகள் நான் அவரிடம் சண்டையிட்டுள்ளேன். அப்பாவி ரிஸ்க்கானை வைத்து வர்த்தகம் செய்யவேண்டாம் எனக் கூறினேன். இறுதியில் மதுஷை பழிதீர்க்க அவரது எதிரிகள் ரிஸ்கானைக் கொன்றனர்.”
– இப்படி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார் கஞ்சிப்பான இம்ரான்.
டுபாயில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுடன் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு அரசால் அண்மையில் நாடு கடத்தப்பட்ட கஞ்சிப்பான இம்ரான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பாதுகாப்பில் துறைமுகத்தை அண்டிய பாதுகாப்பு பகுதியின் சிறைக்கூடமொன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந்த விசாரணையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“புதுக்கடை ட்ரொப் மீ வாடகை வாகன சேவையை ஆரம்பித்த ரிஸ்கான் ஒரு அப்பாவி. அவரை வைத்து பணத்தை முதலிட்டு வர்த்தகமொன்றை ஆரம்பிக்க வேண்டாமென நான் மதுஷிடம் சொன்னேன். கேட்கவில்லை. இறுதியில் மதுஷை பழிதீர்க்க அவரது எதிரிகள் ரிஸ்கானைக் கொன்றனர்.
‘கொத்த அசங்க’ என்பவரே ரிஸ்கானைக் கொன்றார்.அவருக்கு எங்களுடன் பிரச்சினை இருந்தது. ‘கடுவெல சமயங்’ கொல்லப்பட்டதால் அவர் கோபத்துடன் இருந்தார்.
ரிஸ்கான் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு நான் மதுஷுடன் சண்டையிட்டேன். அப்பாவியைக் கொல்ல வைத்து விட்டதற்காக ஏசினேன். ஆனால், என்னைக் கவலைப்பட வேண்டாம் என்றும், கொன்றவர்களைப் பலி தீர்ப்பதாகவும் மதுஷ் என்னுடன் சொன்னார்.
ஒரு வார காலத்துக்குள் கொலையாளியைக் கண்டுபிடித்து ரிஸ்கானைக் கொன்ற இடத்தில் அவனது தலையைக் கொண்டுவந்து வைப்பதாகவும் மதுஷ் சொன்னார். அந்த ஒரு வாரம் நான் மதுஷுடன் பேசவே இல்லை. ஆனால், சொன்னபடி மதுஷ் செய்தார்.
ரிஸ்கானைக் கொன்ற கொஸ்மல்லியை மதுஷ் எப்படிக் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. மரத்தில் கட்டப்பட்டிருந்த கொஸ்மல்லியுடன் வீடியோ கோலில் பேசிய மதுஷ் கழுத்தை வெட்டிக் கொலை செய்யப்போவதாக சொன்னதுடன் அப்படியே செய்ய உத்தரவிட்டார். அத்துடன், கழுத்து வெட்டப்படுவதையும் நேரடியாகவே பார்த்தார்.
பின்னர் ரிஸ்கான் கொல்லப்பட்ட இடத்துக்கு கொஸ்மல்லியின் தலையையும் கொண்டு வந்து போடவைத்தார் மதுஷ். அதன் பின்னரே மதுஷ் மீதான எனது கோபமும் தணிந்தது.
டுபாய் விருந்து
டுபாய் நாட்டுக்கு நானே வரவழைத்து மதுஷுக்கு அங்கு வசதிகளை செய்து கொடுத்தேன். ஆனால், ஊடகங்களில் பெயர் பிரபலமாகத் தொடங்கியதும் அகலக் கால் வைக்கத் தொடங்கினார் மதுஷ்.
டுபாயில் இந்த விருந்தை நடத்த வேண்டாம் என நான் அவரிடம் கூறினேன். இப்போதுள்ள நிலையில் இது சரியானதல்ல என்றே கூறினேன். ஆனால், அவர் தனது இலங்கை நண்பர்களுடன் சேர்ந்து இதனைச் செய்தார்.
அன்றைய விருந்துக்கும் நான் செல்லவில்லை. ஆனால், பல தடவைகள் தொலைபேசியில் என்னை அழைத்து மதுஷ் வற்புறுத்தியதால் செல்லவேண்டியேற்பட்டது. நான் வரும் வரை கேக் வெட்டமாட்டேன் என அவர் அடம்பிடித்தார். தனது தற்பெருமையைக் காட்டவே மதுஷ் அந்தப் பார்ட்டியை ஒழுங்கு செய்திருந்தார்.
இலங்கையில் இருந்து யாரையும் அழைக்க வேண்டாம் என்று நான் கூறியதைக் கேட்காமல் மதுஷ் நடந்துகொண்டார். அதனால் விருந்து முடிய முன்னர் எனது குடும்பத்தினரை நான் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நானும் காரில் ஏற முற்பட்டபோதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டேன்” – என்று கூறியுள்ளார்.
டுபாயில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் பலருடன் பேசியமை குறித்தும் வாக்குமூலம் அளித்துள்ளார் கஞ்சிப்பான இம்ரான். தமக்கு எதிரான பாதாள உலகக் கோஷ்டியினருடன் தொடர்புகளை வைத்து தமக்கு எதிராக செயற்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை இதன்போது எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா
Post a Comment
Post a Comment