மைத்திரியின் சகாக்கள் ரணிலுடன் சங்கமம்!




ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர்  உட்பட அக்கட்சியின் 22 உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர்.
குருணாகல் மாவட்டத்திலுள்ள பல தேர்தல் தொகுதிகளையும் சேர்ந்த சு.க. உறுப்பினர்களே இவ்வாறு கட்சி மாறியுள்ளனர் என்றும், இவர்களில் சிலர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டனர் என்றும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணம் தவறான வழியில் செல்வதாலேயே தமக்கு இத்தகைய முடிவை எடுக்க நேரிட்டதாக ஐ.தே.கவில் இணைந்த சு.க. உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக இனி கடுமையாக உழைக்கப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஐ.தே.கவின் பொதுச்செயலாளரும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சகிதம் அலரிமாளிகைக்கு வருகை தந்த மேற்படி உறுப்பினர்கள் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டனர்.