கூகுள், ஃபேஸ்புக் எப்படி சம்பாதிக்கின்றன?




சவுதி அரேபியா நாட்டின் ஒட்டுமொத்த சராசரி ஆண்டு வருமானம் 684 பில்லியன் டாலர். இந்த மொத்த வருவாயை விட ஆப்பிள், அமேசான், ஆல்ஃபாபெட், மைக்ரோசாஃப்ட் மற்றும் பேஸ்புக் ஆகிய ஐந்து நிறுவனங்களின் வருமானம் (802 பில்லியன் டாலர்) அதிகம்.
கூகுள், ஃபேஸ்புக் எப்படி சம்பாதிக்கின்றன? புள்ளிவிவர தகவல்கள் .


உலகளவில் பெரிய தொழில் நிறுவனங்கள் எப்பொழுதுமே தங்கள் வருமானங்களை கோடிகளில் குவிக்கும். அந்த நிறுவனங்கள் எப்படி இவ்வளவு வருவாயை ஈட்டுகின்றன, எந்தெந்த வகைகளில் அந்த நிறுவனங்களுக்கு வருவாய் வருகின்றது, அதிகளவு வருவாய் ஈட்டும் நிறுவனம் எது என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

சவுதி அரேபியா நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் 684 பில்லியன் டாலர். இந்த மொத்த வருவாயை விட ஆப்பிள், அமேசான், ஆல்ஃபாபெட், மைக்ரோசாஃப்ட் மற்றும் பேஸ்புக் ஆகிய ஐந்து நிறுவனங்களின் வருமானம் (802 பில்லியன் டாலர்) அதிகம். இந்த நிறுவனங்கள் எத்தனை கோடி சம்பாதிக்க முக்கிய காரணம் மக்களாகிய நாம்தான். இந்த நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதிலும் பரவியுள்ளனர். அந்த நிறுவனங்களின் பொருட்களை நாம் வாங்குவது, அவர்களின் செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர். அந்த விவரங்கள் இதோ.

கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான் வருமானங்கள்

ஆப்பிள் நிறுவனம்:

1976-ல் தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம், 2018-ம் ஆண்டில் மட்டும் 265.6 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் ஐபோன் விற்பனையில் மட்டும் 166.7 பில்லியன் டாலர் வருமானம் வருகிறது. ஐபேட் விற்பனையில் 18.8  பில்லியன் டாலரும், ஐமேக் விற்பனையில் 25.5  பில்லியன் டாலரும், ஹெட்போன், வாட்ச் போன்ற போன்ற சாதனங்களின் மூலம் 17.4 பில்லியன் டாலரும், மற்ற சேவைகள் மூலம் 37.2 பில்லியன் டாலர் வருமானமும் சம்பாதிக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

அமேசான்:

1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம், 2018-ல் ஈட்டிய வருமானம் 232.9 பில்லியன் டாலர். இதில் ஆன்லைன் விற்பனையின் மூலம் மட்டும் 123 பில்லியன் டாலர் வருவாய் வருகிறது. மூன்றாம் தரப்பு விற்பனையின் மூலம் 42.7 பில்லியன் டாலர், இணையதள சேவையின் மூலம் 17.2 பில்லியன் டாலரும், கடைகளின் மூலம் 17.2 பில்லியன் டாலரும், பிரைம் சந்தா சேவைகளின் மூலம் 14.2 பில்லியன் டாலர், பிற சேவைகளின் மூலம் 10.1 பில்லியன் டாலர் வருவாய் சம்பாதிக்கிறது அமேசான் நிறுவனம்.

ஆல்ஃபாபெட்:

2015-ல் தொடங்கப்பட்ட ஆல்ஃபாபெட் நிறுவனம், 2018-ம் ஆண்டில் சம்பாதித்த மொத்த வருமானம் 136.8 பில்லியன் டாலர். அதில் கூகுளில், யூடியூப், கூகுள் ப்ளே, ஜி-மெயில், கூகுளில் மேப் போன் சேவைகள் மூலம் வரும் வருமானம் மட்டும் 96.3 பில்லியன் டாலர். கூகுள் நிறுவன விளம்பரங்களின் மூலம் 20 பில்லியன் டாலரும், மற்ற சேவைகள் மூலம் 20.6 பில்லியன் டாலர் வருமானம் வருகிறது.

மைக்ரோ சாஃப்ட்:

1975-ல் தொடங்கப்பட்ட மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், 2018-ம் ஆண்டு  ஈட்டிய வருமானம் மட்டும் பில்லியன் டாலர், MS ஆபிஸ் மூலம் 28.3 பில்லியன் டாலரும், மைக்ரோ சாஃப்ட்  அசூர் மூலம் 26.1  பில்லியன் டாலரும், விண்டோஸ் மூலம் 19.5  பில்லியன் டாலரும், கேமிங் மூலம் 10.4  பில்லியன் டாலரும், விளம்பரங்களின்  மூலம் 7.0 பில்லியன் டாலரும், நிறுவனங்களுக்கு வழங்கும் சேவைகள் மூலம் 7.0 பில்லியன் டாலரும், சாதனங்களின் விற்பனையின் மூலம் 5.1 பில்லியன் டாலரும், லிங்க்டின் மூலம் 5.3 பில்லியன் டாலரும், மற்ற சேவைகள் மூலம் 2.8 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுகிறது மைக்ரோ சாஃப்ட் நிறுவனம்.

ஃபேஸ்புக்:

2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனத்தின், 2018-ம் ஆண்டு மொத்த வருமானம் 55.8 பில்லியன் டாலர். அதில் பெரும்பான்மையான வருமானம் விளம்பரங்களின் மூலமே வருகிறது. விளம்பரங்கள் மூலம் 55.0 பில்லியன் டாலரும், பிற சேவைகள் மூலம் 0.8 பில்லியன் டாலரும் சம்பாதிக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.