நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் கிடைக்கும் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆனாலும் குஷ்பு வருத்தப்படாமல் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் சில தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து சென்றும், வேனில் பயணித்தும் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை பார்ப்பதற்காக பெருங்கூட்டம் திரண்டது. கூட்டத்தினர் மத்தியில் குஷ்பு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு ஆசாமி குஷ்புவை தவறான இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த குஷ்பு பின்னால் திரும்பி அந்த வாலிபரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு குஷ்புவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Post a Comment
Post a Comment