எனக்கும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான ஸஹ்ரான் என்பவரின் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது




எனது நற்பெயருக்குக்  களங்கம் ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை தான் முற்றிலும் மறுப்பதாகவும், எனக்கும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான ஸஹ்ரான் என்பவரின் இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்புகளும் கிடையாது எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம் பெற்ற குண்டு வெடிப்புச்  சம்பவத்தை அடுத்து, குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் “ஸஹ்ரான்”  என்பவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப்  பிரசுரித்து, என் மீது மிக மோசமாகவும்   அபாண்டமாகவும்   பழி சுமத்தி,  என்னுடைய நற்பெயருக்குக்  களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்தேன் .
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற  பாராளுமன்றத்  தேர்தலில் நான் வேட்பாளராக இருந்த போது,  சகல வேட்பாளர்களையும் அவர் அழைத்து கலந்துரையாடினார். அந்தச்  சந்தர்ப்பத்தில் “ஒரு வேட்பாளர்”  என்ற அடிப்படையில் நானும் அதில்  கலந்துகொண்டேன்.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல முஸ்லிம்  வேட்பாளர்களும் அங்கு கலந்து கொண்டு,  அவரோடு தேர்தல் தொடர்பில்  கலந்துரையாடினார்கள். அவ்வாறன கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே, இன்று என் மீது பழி சுமத்துவதற்காக ஊடகங்களில்  பிரசுரித்து, எனது நற்பெயருக்குக்  கலங்கம் விளைவிக்க ஒரு சிலர் முனைந்து வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற  தேர்தலுக்குப்  பிறகு எந்தச்  சந்தர்ப்பத்திலும் அவரை நான் சந்திக்கவில்லை. அத்துடன்,  அவரின் இயக்கத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில்  மிகத்தெளிவாகக்  குறிப்பிட விரும்புகின்றேன்.
மேலும், இக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும்,  அவரது  இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியது  கிடையாது என்பதையும் இங்கு ஆணித்தரமாகச்  சுட்டிக்காட்ட  விரும்புகின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.  
– தகவல் – ஐ. ஏ. காதிர் கான்