நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள்




(க.கிஷாந்தன்)
நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் 01.04.2019 அன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. காலை நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
வருடந்தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிரகறிவாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடை தாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் நடைபெறவுள்ளன.
இந்த வருடம் ஏனைய வருடங்களைவிட அதிகமான உல்லாச பிரயாணிகள் வருகை தருவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தெரிவிக்கின்றார். வருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மேலும் குறிப்பிடுகின்றார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை உல்லாச பிரயாணிகளாக வருபவர்கள் நுவரெலியாவின் இயற்கையையும் அதன் சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
பொலிதீன் மற்றும் கழிவுப் பொருட்களை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் போடுமாறும் பாதைகளில் போடுவதன் மூலம் தண்டனைக்குட்பட வேண்டி வரும் எனவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த வருடங்களை விட இந்த வருடம் சூழல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் நகர முதல்வர் மேலும் தெரிவிக்கின்றார்.