இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் இணைந்து இத்தாக்குதலை தாக்குதலை நடத்தியிருக்கின்றன என்று அவர் தமது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்.
ஆனால் இது தொடர்பான மேற்கொண்டு எந்தவித தகவலையும் அவர் அளிக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், பாதுகாப்புத் துறை ராஜீய அமைச்சரும், பிரதமருமே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள். ஆனால், இத்தகைய தாக்குதல் நடக்க இருப்பது தொடர்பாக கிடைத்த தகவல்கள் பாதுகாப்புத் துறை துணை அமைச்சரான (ராஜீய அமைச்சர்) தம்மிடமும், பிரதமரிடமும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனிடையே இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழு (ஐ.எஸ். குழு) இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தமது ஊடகப் பிரிவு மூலம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றிருப்பதை சற்று கவனமாக அணுகவேண்டும் என்று இலங்கையில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார். "வழக்கமாக தாக்குதல் நடந்த உடனே, தாக்குதல் நடத்தியவரின் புகைப் படத்தை தமது ஊடகத் தளமான 'அமாக்'கில் வெளியிட்டு பொறுப்பேற்பதே ஐ.எஸ். குழுவின் வழக்கம்" என்று அவர் கூறுகிறார்.
தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிரியாவை சேர்ந்தவர் ஒருவரும் அடக்கம். உள்ளூர் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
JEWEL SAMADநாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு
இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் இன்று மதியம் நாடாளுமன்றம் கூடியது.
அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தேவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment