கல்முனை- சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர், வீடொன்றில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதில், 6 ஆண்களும் மூன்று பெண்களும் 6 சிறுவர்களுமள் உள்ளடங்குவதாகவும் இதில் அறுவர், பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதன்போது 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது பகுதியில், நேற்று (26) இரவு, பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படையினரின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இனந்தெரியாத குழுவொன்றுக்கும் பாதுகாப்புத் தரப்பும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
இதன்போது, பொதுமகன் ஒருவர் உயிரிழந்தார் என்றும் மேலும் மூவர் படுகாயமடைந்தனர் என்றும் இராணுவம் தரப்பில் எந்தவொரு பாதிப்பும் இடம்பெறவில்லை என்றும் பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அத்தோடு, தெமட்டகொடையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலைப் போன்றே, பாதுகாப்புத் தரப்பினர், வீடொன்றை சுற்றிவளைத்தபோது, அங்கு, குடும்பத்தோடு குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைச் செய்துக்கொண்டிருக்கலாம் என்று பாதுகாப்பு தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில், நேற்று இரவு முதல் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. 15 சடலங்களை மீட்டுள்ள பாதுகாப்புத் தரப்பினர், தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment