மொசாம்பிக்கின் வரலாறு காணாத பேரழிவு #Idai




இடாய் சூறாவளி ஏற்படுத்திவிட்டுப்போன பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளவில்லை மொசாம்பிக். இதை `மோசமான வானிலை பேரழிவு’ என அறிவித்திருக்கிறது ஐ.நா. சபை.
`நிலமெங்கும் செத்து மிதக்கும் உடல்கள்!’ மொசாம்பிக்கின் வரலாறு காணாத பேரழிவு #Idai
ஒரு சூறாவளிதான் அதுவும் கடந்துபோய் இரண்டு வாரம் ஆகிறது, ஆனால், அதன் பாதிப்பிலிருந்து கொஞ்சமும் மீள முடியாமல் தவிக்கிறது தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நாடான மொசாம்பிக். அங்கே மட்டுமல்ல, அருகே இருக்கும் நாடுகளான மலாவி, ஜிம்பாப்வே நாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த 2019 March மாத தொடக்கத்தில் 4-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் சூறாவளி உருவானது. அதற்கு இடாய் எனப் பெயரிடப்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை இடாய் ஓர் அழியாத வடுவைக் கொடுத்துவிட்டுப் போகும் என்று.

நிலமெங்கும் செத்து மிதக்கும் உடல்கள்

மொசாம்பிக்

கடந்த 4-ம் தேதி மொசாம்பிக்கின் அருகே இருக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவானது இடாய் சூறாவளி. அப்போதே அதன் தாக்கம் நிலப்பகுதியில் தெரிய ஆரம்பித்துவிட்டது. அடுத்த நாள் மொசாம்பிக் மற்றும் மலாவியில் கடுமையான மழை பெய்யத்தொடங்கியது. அதற்கடுத்த தொடர்ச்சியான நாள்களில் தீவிரமடைந்தது இடாய் சூறாவளி. ஒரு வழியாக 14-ம் தேதி பெய்ரா நகரின் அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது அந்தப் பகுதியில் 105 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியதோடு மட்டுமன்றி மழையும் தீவிரமடைந்ததால் நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து 10 நாள்களுக்கு மேல் நீடித்த இடாயின் விளைவால் நாடு முழுவதிலும் நிலைமை மோசமாகத் தொடங்கியது, குறிப்பாக பெய்ரா நகரில்.

இடாய் சூறாவளி

மொசாம்பிக் நாட்டில் இருக்கும் நான்காவது பெரிய நகரம் பெய்ரா. புங்க்வே நதி கடலில் கலக்கும் கழிமுகப் பகுதி இந்த நகரத்தில்தான் அமைந்திருக்கிறது. அதன் காரணமாக மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்றப்பட்டதால் பாதிப்பும் அதிகமானது. சூறாவளி கரையைக் கடந்த பின்னரும் மழை தொடர்ந்ததால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள்ளாகப் பல லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் இருப்பிடத்தை இழந்திருந்தனர். வயல் வெளிகள், சாலைகள், நீர் நிலைகள் என வித்தியாசமே தெரியாத அளவுக்கு வெள்ளப் பாதிப்பு இருந்தது. இப்போது இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் நாடு இன்னும் சகஜமான நிலைக்குத் திரும்பவில்லை. இதுவரை கிட்டத்தட்ட 700 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காணாமல்போன பலரின் நிலைமை இன்னும் தெரியவில்லை என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் இப்போது வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன. ஆங்காங்கே மனித உடல்கள் பரவிக்கிடக்கின்றன. அதே நேரம் உண்மையான சவால் என்பது இனிமேல்தான் இருக்கப்போகிறது.

இடாய் சூறாவளி

இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு ஏற்படும் அடுத்தகட்ட பாதிப்புகளை இரண்டாவது பேரழிவாகக் கணக்கில் கொள்ளலாம். திடீரென ஏற்படும் இயற்கைப் பேரழிவால் உணவு, உடை, இருப்பிடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவார்கள். இடாய் புயலால் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கட்டுமானங்கள் அழிவுக்குள்ளாகியிருக்கிறது. ``முன்பு என்னிடம் தங்கிக்கொள்ள வீடாவது இருந்தது. வேறு எதுவும் பெரிதாக இல்லையென்றாலும்கூட வாழ்க்கை இயல்பாக நகர்ந்துகொண்டிருந்தது. சூறாவளிக்குப் பின்னர் எதுவுமே இல்லை, அந்த வீடுகூட’’ எனப் பெய்ராவாசி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பெய்ரா நகரம்

சுத்தமான குடிநீர், உணவு ஆகியவை பொதுமக்களுக்குக் கிடைப்பது கடினமானதாக இருந்துவருகிறது. வெள்ளப் பெருக்கு போன்ற பாதிப்புகளுக்குப் பிறகு, நோய்த் தாக்கும் அபாயம் என்பது அதிகளவில் இருக்கும். அரசு பயந்தது போலவே தற்போது காலரா பாதிப்பு மக்களிடையே தென்பட ஆரம்பித்திருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் ஒரே நாளில் பெய்ரா நகரில் காலராவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து 100-ஐத் தாண்டியிருக்கிறது.

மீட்புப் பணிகள்

பல நாடுகள், மொசாம்பிக் இந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவி செய்து வருகின்றன. இந்தியா மீட்புப் பணிகளில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி நிவாரணப் பொருள்களையும் கொடுத்து வருகிறது. நிவாரணப் பொருள்கள் ஏற்கெனவே மூன்று கப்பல்களில் அனுப்பப்பட்டுவிட்ட நிலையில் மூன்று நாள்களுக்கு முன்னால் ஐ.என்.எஸ் மகர் என்ற கப்பல் 300 டன் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பெய்ரா நகரத்தை நோக்கி கிளம்பியிருக்கிறது

கவலைகொள்ள வைக்கும் காலநிலை மாற்றம்

 காலநிலை மாற்றம்

இடாய் சூறாவளியின் பாதிப்பைத் தென் அரைக்கோளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு என அறிவித்திருக்கிறது ஐ.நா. சபை. சமீப காலமாக உலகம் முழுவதும் அதிகரித்துவரும் இயற்கைப் பேரிடர்களுக்குக் காலநிலை மாற்றத்தைக் கை காட்டுகிறார்கள் சூழலியல் நிபுணர்கள். அதேபோல இடாய் இந்த அளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. `இடாய் சூறாவளி காலநிலை மாற்றத்தின் பாதிப்பை நமக்கு உணர்த்தும் வகையில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி' எனத் தெரிவித்திருக்கிறார் ஐநா சபையின் தலைவர் ஆன்டோனியோ கட்டர்ஸ் (Antonio Guterres). வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் அதைத் தடுக்க ஏதாவது திட்டத்துடன் வாருங்கள் என உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.