திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது




மன்னார் - மாந்தை சந்தியிலுள்ள திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாந்தை சந்தியில் பல வருட காலமாக தற்காலிக அலங்கார பலகையொன்று காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, அந்த அலங்கார பலகையை தாம் புதுப்பிக்க சென்ற வேளையில், கிறிஸ்தவ பாதிரியார்களின் தலைமையிலான சில குழுவினர் வருகைத் தந்த அதற்கு இடையூறு விளைவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை

தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார பலகையையும் பாதிரியார்கள் தலைமையிலான குழுவினர் உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.
திருகேதீஸ்வரம் ஆலயத்தின் நிரந்தர அலங்கார பலகையை அந்த இடத்தில் ஸ்தாபிப்பதற்கான அனுமதி தம்வசம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் ஆவணங்களும் தம்மிடம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே, குறித்த பாதிரியார்கள் தலைமையிலான குழு, இந்த அலங்கார பலகையை உடைத்தெறிந்துள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாக அதிகாரி கூறினார்.
தமது அனுமதியின்றி, இவ்வாறான அலங்கார பலகைகள் பிரதேசத்தில் காட்சிப்படக்கூடாது என்ற வகையிலேயே கிறிஸ்தவ பாதிரியார்கள் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மறுக்கும் ஆயர்

இந்த விடயம் தொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தை தொடர்புக் கொண்டு வினவினோம்.
இவ்வாறான சம்பவங்களுக்கும், கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லம் குறிப்பிட்டது.
பாதிரியார்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் எனவும் ஆயர் இல்லம் சுட்டிக்காட்டியது.
இதேவேளை, திருகோணமலை - திருகோணஸ்வரம் ஆலயத்தின் வாயிலுள்ள சிவலிங்க சிலையொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தது.

சிவன்

அமைச்சர் கூறுவது என்ன?

இந்த விடயம் தொடர்பில் தனது அமைச்சு முழுமையாக கவனம் செலுத்தியுள்ளதாக இந்துமத விவகார அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேஷன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமனோ கணேஷன்

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாருடன் இந்த விடயம் தொடர்பில் தான் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மனோ கணேஷன் கூறினார்.