மகா சிவராத்திரி தினம் நம் அனைவருக்கும் பிரகாசத்தின் தினமாக அமையும்




இன, மத, கலாசாரப் பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மகா சிவராத்திரி தினம் நம் அனைவருக்கும் பிரகாசத்தின் தினமாக அமையும். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பிரதமரின் மகா சிவராத்திரி வாழ்த்து செய்தியில், ஞான ஒளியூடாக ஆன்மீக விடுதலை கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், உலகம் முழுவதும் இந்து சமய மக்கள் ஒன்றிணைந்து வெகு விமரிசையாகவும் மிகுந்த பக்தியுடனும் மகா சிவாரத்திரி தினத்தைக் கொண்டாடுகின்றனர். சிவபெருமானை வழிபடுவது இந்து மக்களின் சமய வழிபாடுகளில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிவபெருமானின் பிரதிபலிப்பாக இயற்கை கருதப்படுவதுடன், அனைத்து உயிர்களினதும் பிறப்பிடம் சிவபெருமான் எனவும் இந்து பக்தர்கள் விசுவாசிக்கின்றனர். 

உலகிற்கு உயிர்ப்பினை வழங்குகின்ற, மனித வாழ்வினை வளப்படுத்துகின்ற சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான இந்த இரவில், அனைவரும் ஒன்றாக விரதமிருந்து, இரவு முழுவதும் கண் விழித்துப் புண்ணிய கருமங்களில் ஈடுபட்டு சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதன் மூலம் ஆன்மீக விடுதலை கிடைப்பதாகக் கருதப்படுகிறது. 

உலகின் பிறப்பு மற்றும் பாதுகாப்பினைப் பிரதிபலிக்கும் சிவதாண்டவம் இடம்பெற்ற இரவாகவும் மகா சிவராத்திரி கருதப்படுவதுடன், அதனைக் கொண்டாடும் வகையில் ஆடல், பாடல், இசை உள்ளிட்ட பல்வேறுபட்ட கலாசார அம்சங்களின் மூலம் மகா சிவராத்திரி பல்வண்ண அழகினைப் பெறுகிறது. 

இன, மத, கலாசாரப் பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மகா சிவராத்திரி தினம் நம் அனைவருக்கும் பிரகாசத்தின் தினமாக அமையும். 

மகா சிவராத்திரி தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் சகோதர இந்து மக்களுக்காகப் பிரார்த்திப்பதுடன், ஆன்மீக விடுதலை மூலம் சாந்தி, சமாதானம் நிலைபெற வேண்டும் என வாழ்த்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)