(#MariyampillaiWaratharajan-Newzeland)
ரூபவாஹினிக்கு அருகில் அவர் வசித்தமையால் எமக்கு அயலவரானார்.
ஓவியராக இருந்தமையாலும் மேடை இசை நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையவராயிருந்தமையாலும் நெருக்கமானார்.
எனது நண்பன் சந்திரகாந்தனின்( இராஜேஸ்வரி சண்முகத்தின் புதல்வர்) நண்பராக இருந்தமையால் இன்னும் கிட்ட வந்தார்.
சந்திரகாந்தன் இவர் குடும்பத்தின் அங்கத்தவராக விரும்பி அதில் வெற்றி கண்டபின்னர் .... .... மேலும் அருகிலானார்.
ஓவியம், வண்ணம், கோடுகள், ரேகைகள், வீக்கே, ஹூனா, சந்ரா, சாமி என்று போய் மாற்கு மாஸ்டர், ரமணி மாஸ்டர் பற்றிய கதைகள், ரமணி ஜெர்மனிக்குப் போக நான் ரமணி யின் பாணியில் முதலுதவி நூலுக்கு வரைந்த ஓவியங்களை இவருக்குக் காட்டியமை, தொடர்ந்து ஓவியங்கள் எழுத்தமைப்புகள், வண்ணங்கள், கொலாஜ்கள், மாற்கு விடம் பயின்ற சிப்பிவேலைகள் பற்றிய எங்கள் உரையாடல்கள் என்பன எம்மை மேலும் இணைத்தன. அவர் என்னுடன் இணைந்தார்
அவர் பழகும் மற்றவர்களுடனான நட்பைவிட
என்னுடனான நட்பு மேற்சொன்ன விடயங்கள் விளிம்புகளாக நின்ற நட்பாக விருந்தது. அது ஒரு மரியாதைக்குரிய அழகியல் சார்ந்த அன்பாகவே எனக்குப்பட்டது. அந்த உறவை நான் மரியாதையாக அவருடன் தொடர்ந்து பேணிக் கொண்டேன்.
அவர் சிரித்திரன் இதழின் வாசகராகவும் இரசிகராகவுமிருந்தார். சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் ஊரில் எனது அயலவர் என்று நான் சொன்னதி லிருந்து இன்னும் நாம் நெருங்கினோம்.
மாற்கு மாஸ்டருக்காக வெளியிடப்பட்ட 'தேடலும் படைப்புலகும்' என்ற நூலின் ஒரு பிரதியை நான் கொடுத்தபோது 'சூரியனைக் கண்ட தாமரையாக' என்பார்களே.. அப்படி முகம் மலர்ந்தார். எப்போதும் சிரித்த முகமாய்த் திகழும் அவர் முகத்தின் கோடுகள், ஓவியர்கள் பற்றிய அந் நூலைக் கண்டு மகிழ்ந்தபோது அவர் ஓர் ஓவியக் கலைஞன்தான் என்பதைக் காட்டி அசைந்தன.
'தாங்க்ஸ் வரதா... ' என்று அவர் மகிழ்ச்சி பிரவாகிக்க அப் புத்தகத்தை தட்டித் தட்டிப் பார்க்கும்போதுதான் அவரினுள்ளேயிருந்த 'ஆட்டிஸ்ற் செல்வராஜா' எனும் ஓவியன் எனக்கு வெளியே தெரிந்தான்..
எனது நிகழ்ச்சிகளின் விமர்சகர்களில் ஒருவராக அவர் இருந்தார்.
தொலைக்காட்சியில் எனது' இளம் பச்சைப் பருவத்தில்' நான் தயாரித்து ஒளிபரப்பான 'வளரும் உலகம்' 'கதை மலர்' ஆகிய சிறார்கள் நிகழ்ச்சிகள் பற்றி அடிக்கடி தமது கருத்தைச் சொல்வார்.
சங்கமம் என்ற இளங்கலைஞரை அறிமுகம் செய்யும் இசை நிகழ்ச்சிக்கு புதிய இசைக்குழுக்களை ஊக்குவித்து, எனக்குத் தெரிவித்தார்.
' பார்த்து.. நல்லாயிருந்தால் எடுங்க.. கொஞ்சம் ஊக்கம் கொடுங்க ' என்று புதியவர்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டினார்.
எனது காட்சி ஊடக வளர்ச்சியில், நிழலாக வகிபாகம் வகித்தவர்களில் செல்வா அண்ணரும் ஒருவர் என்பேன்.
அமைதியான புன்னகை. ஆழமான கதைகள்.
இனிமையான சிரிப்பு. ஈர்ப்பு மிக்க முகம்.
உரிமையான நட்பு. ஊக்குவிக்கும் உரைகள். எளிமையான தோற்றம் என்று அவரது பண்புகளை ஒரு நல்ல இரசனைமிக்க கலைஞனின் சிறப்பாகக் கொள்ளலாம்.
நல்ல கலைஞனிடத்தில் ஓர் இரசிகன் இருப்பான் என்பதற்கு ஆட்டிஸ்ற் செல்வா அண்ணர் ஒரு நல்ல உதாரணமாகும்.
எங்கு கண்டாலும் சற்று நின்று புன்னகைத்து 'என்ன கதை' என குசலம் விசாரிக்கும் அவரது முகத்தை நான் இனிக் காணப்போவதில்லை என்பது உண்மை.
இப்படியான பிரிவுகள் எமக்குச் சொல்லும் கதை ஒன்றே. வாழ்வின் நிலையாமையே நிலையானதாகும் என்பதே அது.
'மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்ட ஓடடா' என்பதை நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் பிரியும் போது மட்டுமே நாம் உணருகின்றோம்.
ஆட்டிஸ்ற் செல்வா அண்ணரின் பிரிவும் தரும் செய்தி இதுவே!
Post a Comment
Post a Comment