ராணுவ தொப்பி விவகாரம்: பாகிஸ்தான் ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் இருப்பதென்ன?




தற்போது இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்கள் பாணியில் கேமாஃபிலஜ் தொப்பியை அணிந்து விளையாடினர். இதையடுத்து இந்திய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐசிசியிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டுள்ளது.
குறைந்தபட்சம் நாற்பது சி ஆர் பி எஃப் வீரர்கள் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து நாட்டின் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதாக இந்தியா கூறியுள்ளது.
பாகிஸ்தானின் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்திய நிர்வாக காஷ்மீர் பகுதியில் தற்கொலை தாக்குதல் நடத்தியது.
இப்போட்டிக்கு முன்னதாகவே பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) ஐசிசியிடம் இந்த தொப்பிகளை அணிந்து விளையாட அனுமதி கேட்டுள்ளது. தொண்டு நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இதற்கு அனுமதி அழைக்கப்பட்டதென ஐசிசி தாம் அனுமதி அளித்ததை உறுதி செய்துள்ளது.
''உயிரிழந்த வீரர்களின் நினைவாகவும் அவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் பிசிசிஐ எங்களிடம் அனுமதி கேட்டது. இதையடுத்து ஐசிசி அனுமதி வழங்கியது'' என ஐசிசியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இப்போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது அன்றைய ஆட்டத்துக்கான சம்பளத் தொகையை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தானம் செய்தார்கள். இப்போட்டியில் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
''இந்தியா கிரிக்கெட் விளையாட்டை அரசியல் செய்வதற்காக பயன்படுத்துகிறது'' என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எசான் மணி ஐசிசிக்கு எழுதியிருந்தார்.
''இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களது நோக்கத்தில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் எங்களுடைய வாதத்தை மிக வலுவாக ஐசிசியிடம் எடுத்து வைத்திருக்கிறோம்.கிரிக்கெட் உலகத்தில் இந்தியாவின் நம்பகத்தன்மை தற்போது மிகவும் மோசமாக சரிந்துள்ளது'' என மணி தெரிவித்தார்.
மொயின் அலிபடத்தின் காப்புரிமைSTU FORSTER
முன்னதாக அரசியல் நிலைப்பாட்டை களத்தில் தெரிவிக்கும் விதமாக கிரிக்கெட்டை பயன்படுத்தியதற்கு ஐசிசி நடவடிக்கை எடுத்ததை மணி சுட்டிக்காட்டியுள்ளார்.
''இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மெயின் அலி 'சேவ் காசா' மற்றும் 'ஃப்ரீ பாலஸ்தீன்' ஆகிய பிரசார வாக்கியங்கள் எழுதப்பட்ட கைப்பட்டை அணிந்து கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாஹீர் கடந்த 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதையடுத்து காலஞ்சென்ற மத போதகர் ஜுனைத் ஜாம்ஷெத் உருவம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் வெளியே தெரியுமாறு கொண்டாடினார். இந்த இரு சம்பவங்களிலும் வீரர்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை கிரிக்கெட்டில் புகுத்தியதற்காக ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இவை கடந்த கால உதாரணங்கள் '' என மணி கூறினார்.
ஐசிசி இவ்வீரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து. இதே போன்றதொரு நடவடிக்கையை இந்தியாவுக்கு எதிராகவும் எடுக்கவேண்டும். வேறொரு காரணத்துக்காக அவர்கள் அனுமதி பெற்றிருந்தாலும் களத்தில் இந்திய வீரர்கள் வேறு மாதிரியாக செயல்பட்டார்கள்'' என மணி கூறினார்.