இந்து ஆலயம் புத்தமயமாகிறது?




#BBC
இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.
நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து ஆலயங்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.
குறிப்பாக மன்னர்கள் சிவ வழிபாட்டிலேயே ஈடுபட்டிருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்து ஆலயமொன்று சிதைவடைந்த நிலையில், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆலயம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அவிசாவளையில் அமைந்துள்ளது.

அவிசாவளை நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தல்துவை பகுதியில் இந்த ஆலயம் (பெரண்டி ஆலயம்) அமையப் பெற்றுள்ளது.
சீதாவக்கை அரசை ஆட்சி செய்த மாயாதுன்னை மன்னனின் ஆட்சிக் காலத்தில் அவரது மகனான முதலாம் இராஜசிங்க மன்னனால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
தனது தந்தையை கொலை செய்து, ஆட்சிப் பீடத்தை கைப்பற்றிய பாவத்திலிருந்து விடுபடும் நோக்கில், மதகுருமார்களின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த ஆலயம் கி.பி. 1581 - 1593 காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து சிற்பிகள், வல்லுநர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, பெருமுயற்சி எடுத்து இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரண்டி ஆலயம்
இவ்வாறு வரழைக்கப்பட்டவர்களில் ஒருவர் அரிட்டுகே என இலங்கை வரலாற்றில் தெரிவிக்கப்படுகிறது.
அரிட்டுகே சிற்பத்துறையில் மாத்திரமன்றி, சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார்.
சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து, ஆற்றை வேறு திசைக்கு திருப்பி ஆலயம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என மன்னன், சிற்பத்துறை நிபுணரான அரிட்டுகேவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆற்றை திசை திருப்பி ஆலயம் நிர்மாணிப்பது பாவச் செயல் எனவும், அவ்வாறு ஆறு திசை திருப்பப்பட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மன்னனிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரிட்டுகேயின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத மன்னன், ஆலயத்தை நிர்மாணிக்குமாறு பணித்துள்ளார்.
இதன்படி, சிவனின் வடிவமான பைரவரை மூலக் கடவுளாக கொண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெரண்டி ஆலயம்
அரிட்டுகேயின் எச்சரிக்கையை மீறி இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, குறுகிய காலத்தில் முதலாம் இராஜசிங்கன் இறந்ததாக பிரதேச மக்கள் இன்றும் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்த ஆலயத்தில் காளி அம்மன் வழிபாடு நடைபெற்றதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அப்பகுதியில் காட்சிப்படுத்தியது அங்குள்ள தகவல் பலகைமூலம் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், அப்பகுதி மக்கள் இன்றும் அந்த இடத்தில் பைரவர் வழிபாடே இடம்பெற்றதாக நம்பி வருகின்றனர்.
பைரவர் காவல் தெய்வம் என்பதற்காக அந்த பகுதி மக்கள் 'பைரவயா எனவோ" (பைரவர் வாறார்) என இரவு நேரங்களில் கூறி அச்சப்பட்டுள்ளனர்.
இதுவே பிறகு பெரண்டி என பெயர் மருவியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். சீதாவாக்கை ஆறு ஊடறுத்து செல்லும் சிறிய குன்றுப் பகுதியில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெரண்டி ஆலயம்
கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும், சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்திற்கான பழமை சான்றுகளை வெளிப்படுத்துகின்றன.
இவ்வாறான வரலாற்று சான்றுகளை கொண்ட இந்த ஆலயம், தற்போது அடித்தளத்தை மாத்திரமே கொண்டுள்ளது.
இந்த ஆலயத்தை இலங்கை தொல்பொருள் திணைக்களம் பாதுகாத்து, பராமரித்து வருகின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.
பெரண்டி ஆலயம்

வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலய வளாகம், புத்தமயமாகும் விதம்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பெரண்டி ஆலயம், இன்று முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில், அதனை இலங்கையின் பெரும்பான்மை சமுகமான சிங்கள சமூகம் ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகிறது.
அதற்கு சிறந்த ஆதாரமாக, இந்த ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்கும் பகுதியில் புத்தப் பெருமானின் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அருகில், பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.
அத்துடன், பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஒன்று திரண்டு, ஆலயத்தை சூழ பராமரித்தும் வருவதும் காணக்கூடியதாக உள்ளது.