(க.கிஷாந்தன்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்காலத்தில் ஊழல் அற்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாமும் ஒன்றிணைவோம். இதை எல்லாம் உருவாக்குவது இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் மலையக மக்களுகம் ஒரு சக்தியாக இருக்க வேண்டும் என மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்துக்கான கலாச்சார மண்டபம் 03.03.2019 அன்று மாலை மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் என கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2015ம் ஆண்டுக்கு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த பொழுது பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து உடனுக்குடன் முன்னெடுத்தார்.
எனினும் இதை விட மேலதிக அபிவிருத்தி திட்டங்களை புதியவர் ஒருவர் வந்தால் முன்னெடுப்பார் என நினைத்து மக்களாகிய நீங்கள் வாக்களித்து தெரிவு செய்தீர்கள்.
ஆனால் இன்று அபிவிருத்திகள் என்ன நடந்திருக்கின்றது. இன்று கூட சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு அங்கீகாரம் இல்லை. பதவி இல்லை. இருந்த போதிலும் எவ்வாறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என கேள்வி எழுப்புகின்றார்கள்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு சக்தி வாய்ந்த கட்சியாகும். ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த பணிகளை முன்னெடுக்க கூடிய சக்திகள் உள்ளது.
எனவே தான் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதோடு, பலர் பொருத்துக்கொள்ள முடியாமல் உள்ளனர்.
இதேவேளை வாக்களிப்பது மலையக மக்களின் உரிமையாக இருந்தாலும் சேவைகளை செய்யக்கூடிய பிரதிநிதிகளை மக்களை பாதுகாக்க கூடிய தலைமைத்துவத்தை உருவாக்க வாக்களிக்கவிட்டால் மறுபடியும் இவ்வாறான பின்தள்ளப்பட்ட சமூகமாகவே இருக்க வாய்ப்புள்ளது.
எனவே மக்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒரு நொடியில் சிந்திப்பது அல்ல வாக்களிப்பது. தொடர்ந்து வாக்களிப்பதனால் என்ன என்ன சலுகைகளை யார் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
நாங்கள் வாக்கு கேட்டு உங்களிடம் வரும் பொழுது செய்த எங்களுடைய சேவைகளை கருத்தில் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வருவோமே தவிர பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகள் கேட்க வருவதில்லை.
கடந்த காலங்களில் தேர்தலில் கூட சிலர் வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை சுவீகரித்தனர். ஆனால் இந்த தோட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெற்றுள்ளதா.
2015ம் ஆண்டு மக்கள் தேர்தல் காலப்பகுதியில் மக்கள் சிந்திக்காமல் வாக்களித்ததனால் இன்று வரை போராட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். சம்பள பிரச்சினை கூட பல போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றுள்ளோம். அன்று சிந்தித்து வாக்களித்திருந்தால் சம்பள பிரச்சினையை நாம் போராட்டம் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும் என்றார்.
Post a Comment
Post a Comment