திருமலை பொது வைத்தியசாலை நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அவசர சிகிச்சை பிரிவின் நிர்மாணப் பணிகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 திருகோணமலை பொது வைத்தியசாலையில் நான்கு மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக  மத்திய அரசாங்கத்தினால் 330 மில்லியன் ரூபாய் நிதி யொதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் 
நிர்மாணப் பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவசர விபத்துச் சேவை  பிரிவினை நிர்மாணித்து இந்த வருட இறுதிக்குள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய நிலையில் ஒரு நாளைக்கு மூன்று நான்கு பேர் மாத்திரமே நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் அதிகளவிலான காலம் தேவைப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலை  நிர்மாணப்பணிகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறும் நோயாளர்களும் வைத்தியசாலை தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஒப்பந்த காரருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் மத்திய அரசினால் நிதி வழங்கப்படவில்லை என கூறிக்கொண்டு மந்த கதியில் நிர்மாண பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை அனுமதிக்க செல்லும் வீதி பள்ளமும்,திடலுமாக காணப்படுவதாகவும் இதனால் அவ் வீதியால் செல்லும் நோயாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

எனவே திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவின்  4 மாடிக் கட்டிட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தும் விதத்தில் ஒப்பந்தக்காரர் செயற்பட வேண்டும் எனவும் அவ்வேளை திட்டங்களை மத்திய அரசு துரிதமாக கண்காணித்து மிக விரைவாக  நான்கு மாடி கட்டிடத்தை நிர்மாணித்து வைத்தியசாலை  நிர்வாகத்திற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் நோயாளர்களும் திருகோணமலை புத்திஜீவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்