இந்த நாட்டில் மத ரீதியிலான ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு குழுவினர் முயற்சி செய்து வருகின்றார்களா ?




(க.கிஷாந்தன்)
திருகோணமலையில் சிவன் சிலையை உடைத்திருக்கின்றமையானது மீண்டும் இந்த நாட்டில் மத ரீதியிலான ஒரு குழப்பத்தை  ஏற்படுத்துவதற்கு ஒரு குழுவினர் முயற்சி செய்து வருகின்றார்களா?என்ற கேள்வி எழுகின்றது. எனவே இதனை நான் வனமையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் இலங்கைக்கான உல சைவ திருச்சபையின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா டயகம மன்ராசி  பீ.ஜே.வீ சிறுவர் பாடசாலை ஏற்பாட்டில் நடைபெற்ற வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கான பரிசளிப்பு விழா (02.03.2018) அன்று டயகம நிசாந்தினி மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார். 400 மேற்பட்ட போட்டியாளர்கள் இந் போட்டியில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் சிவ வழிபாட்டை மேன்மை அடைய செய்ய வேண்டும் என்ற வகையில் உலக சைவ திருச்சபை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.குறிப்பாக சைவமும் பௌத்தமும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்ற ரீதியிலேயே நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இவ்வாறான ஒரு நிலையில் திருக்கோணேஸ்வரத்தில் சிவனுடைய அந்த சிலை உடைக்கப்பட்டமையானது சைவத் தமிழர்களுடைய மனங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் நாளை சிவபெருமானுக்கே உரிய சிவராத்திரி பூஜை வழிபாடுகளை நாடுமுழுவதும் தமிழர்கள் வழிபடுவதற்கு தயாராகின்ற இந்த நிலையில் இந்த செயற்பாடானது மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.
இந்த சிலையை தொள்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தினர் உடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அப்படியானால் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?என்ற கேள்வி எங்களுடைய மக்கள் மத்தியில் எழுகின்றது.கடந்த காலங்களில் மத ரீதியாக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதக் காரணமாக ஒரு ஆட்சியையே முடிவிற்கு கொண்டு வந்தி நிலை ஏற்பட்டது.எனவே இது தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் இந்து கலாசார அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் மீண்டும் எங்களுடைய நாட்டில் மத ரீதியிலான மோதல்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.