பூமியில் வாழும் உயிரினங்கள் விண்வெளியில் எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் தாக்குப்பிடித்து வாழும் திறன் கொண்டவை என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன
533 நாள் விண்வெளி வாழ்க்கை... பத்திரமாக பூமிக்குத் திரும்பிய உயிரினங்கள்!
உலகம் முழுவதிலும் உள்ள விண்வெளி அமைப்புகளுக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய குறிக்கோள் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதாகத்தான் இருக்கும். வெளியில் பெரிதாகத் தெரிவதில்லை என்றாலும் உலகின் பல பகுதிகளில் அது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இங்கே மட்டுமல்ல; விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அப்படி சமீபத்தில் வெளியான ஆய்வின் முடிவு ஒன்று விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கடினமான சூழ்நிலையிலும் உயிர்பிழைக்க முடியும் என நிரூபித்த உயிரினங்கள்
சர்வதேச விண்வெளி நிலையம்
நமது சூரியக் குடும்பத்தில் நமது பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்படவில்லை. அதற்கான சூழல் பூமியில் மட்டுமே காணப்படுகிறது. தகுந்த ஏற்பாடுகள் இல்லாமல் பூமியின் காற்று மண்டலத்தைத் தாண்டி வெளியே சென்றால் மனிதர்கள் மட்டுமல்ல, வேறு எந்த உயிரினங்களும் உயிர்வாழ முடியாது. அப்படியென்றால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்ற சந்தேகம் எழலாம். அது மனிதர்கள் பல மாதங்கள் உயிர் பிழைத்திருக்கத் தேவையான வசதிகளைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தப் பரிசோதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் கொஞ்சம் வித்தியாசமான இடத்தில் நடத்தப்பட்டுள்ளது.
BIOMEX
பொதுவாக விண்வெளி ஆய்வு மையத்தின் உள்ளே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஜெர்மனியின் விண்வெளி ஆய்வு மையமான DLR ஒரு புதிய ஆராய்ச்சியைச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வழக்கத்திற்கு மாறான ஒரு பகுதியில் நடத்தத்திட்டமிட்டது. இதில் பாக்டீரியாக்கள், கணுக்காலிகள் மற்றும் பூஞ்சைகள் ஆகிய உயிரினங்களை ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது. BIOlogy and Mars EXperiment என்பதன் சுருக்கமாக BIOMEX என்று இந்தத் திட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. மேற்கூறிய உயிரினங்களைச் சேர்ந்த 46 வகை இனங்கள் காற்று புகாத சிறிய அளவு கொள்கலன்களில் அடைக்கப்பட்டன. செவ்வாயில் இருக்கும் மண் போன்ற மாதிரிகளும் அவற்றுடன் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் இவை ஒரு தொகுப்பாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்தின் Zvezda என்ற பகுதியின் வெளிப்புறத்தில் 014-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி விண்வெளி வீரர்கள் அவற்றை பொருத்தினார்கள். அதன் பின்னர் தொடர்ச்சியாக 18 மாதங்களுக்கு இந்த கொள்கலன்கள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.
Zvezda
சர்வதேச விண்வெளி நிலையத்தினுள் இருப்பதைப் போலச் சூழ்நிலை வெளிப்புறமாக இருக்காது. வெளியில் அதிகளவில் புறஊதாக் கதிரின் தாக்கம் இருக்கும். மேலும் வெப்பநிலையிலும் அதிக அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மிகவும் குறைந்தபட்சமாக -12° செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 40° செல்சியஸ் வரை வெளிப்பகுதியில் வெப்பநிலை நிலவும். உணவை வெப்பப்படுத்தி பின்னர் நிறைநிலைக்குக் கீழ் கொண்டு செல்லும் செயல்முறையைப் போலவே இதுவும் நிகழும். மொத்தமாக இருந்த 533 நாள்களும் இந்த கடினமான சூழ்நிலையை வெளியிலிருந்த உயிரினங்கள் சமாளித்துள்ளன. பின்னர் 2016 பிப்ரவரி 3-ம் தேதி இந்த பரிசோதனைத் தொகுதிகள் பூமிக்குக் கொண்டு வரப்பட்டன. கடந்த 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பெர்லின் நகரில் நடந்த அறிவியல் மாநாட்டில் இந்த ஆய்வின் இறுதி ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற கேள்விக்கான பதில்
செவ்வாய் கிரகம்
BIOMEX ஆய்வின் ஒரே நோக்கம் விண்வெளியில் இருக்கும் கடினமான சூழ்நிலைகளைப் பூமியில் இருக்கும் உயிரினங்கள் தாங்கிக் கொள்ளுமா என்பதைக் கண்டறிவதுதான். 'இந்த உயிரினங்களும் மற்றும் சில உயிர் மூலக்கூறுகளும் விண்வெளியில் இருக்கும் அதிகப்படியான கதிர்வீச்சைத் தாக்குப்பிடித்து பூமிக்குத் திரும்பி வந்துள்ளன' என DLR அமைப்பின் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாயில் இருக்கும் சூழ்நிலை என்பது இதை விடக் கடினமானதுதான் என்றாலும் அங்கே மனிதர்கள் வாழ முடியுமா என்ற கேள்விக்கான பதிலை இந்த ஆய்வின் மூலமாக உயிரினங்கள் தெரிவித்திருக்கின்றன.
Post a Comment
Post a Comment