மகாவலி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 வருட பூர்த்தி




நாட்டின் பொருளாதாரத்தை புதிய பாதையில் இட்டுச் சென்ற, விவசாய மக்களின் வாழ்வை பலப்படுத்திய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் புத்துயிர் பெற்றுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 

1970 பெப்ரவரி 28ஆம் திகதி அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க மற்றும் காணி, நீர்ப்பாசன, மின்சக்தி அமைச்சரான சீ.பீ.டி.சில்வா ஆகியோரால் மகாவலி பாரிய அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்டமாக இந்நாட்டின் நீர்ப்பாசன கலாசாரத்தின் திருப்புமுனையாக அமைந்த பொல்கொல்ல, போவதென்ன நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணி முதல் ஆரம்பிக்கப்பட்ட பாரிய மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் 05 பாரிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்கும் எண்ணக்கரு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்த்தேக்க திட்டம் நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன் நிறைவுபெற்றது. 

அத்தோடு மகாவலி அபிவிருத்தி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய செழிப்பான, வளமிக்க விவசாய சமுதாயத்தை உருவாக்கும் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் பாரிய இயற்கை வளங்களுள் முதன்மையான மகாவலி கங்கையின் ஊடாக நாட்டில் விவசாயம், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை மானிட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான துரித வேலைத்திட்டங்கள் தற்போது ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் செயற்படுத்தப்பட்டுள்ளன. 

நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு உள்ளடக்கப்படும் மகாவலி விவசாய குடியேற்றங்களில் வாழ்ந்துவரும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களினதும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினதும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காகக்கொண்ட பல வேலைத்திட்டங்கள் தற்போது ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் செயற்படுத்தப்படுகின்றன. 

அனைவருக்கும் மகாவலி காணிக்கான உரிமையை வழங்கும் வகையில் சகல மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டம் அவற்றுள் முதன்மை பெறுவதோடு, மகாவலி விவசாயிகளின் பிள்ளைகளின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா அவற்றுள் முக்கிய இடம் வகிக்கின்றது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு