விமானி என ஏமாற்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய பொறியாளர்




தென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆஃப்ரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த 'விமானி' பதவி விலகியுள்ளார்.
வில்லியம் சாண்ட்லர் எனும் அந்த நபர் செய்த முறைகேட்டை அவரது ஆவணங்கள் சரிபார்ப்பின்போது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை கோரியுள்ள விமான சேவை நிறுவனம், அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனி செல்லும் ஒரு பயணத்தின்போது, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்வுகளின்போது, அவர் விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தைத் தூண்டியது என மெயில் அண்ட் கார்டியன் எனும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.