ஓய்வூதிய ஒதுக்கீடு,12,000 மில்லியன்




ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

2015 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இளைப்பாறிய ஏறக்குறைய 560,000 ஓய்வூதியம் பெறுநர்கள் காணப்படுவதுடன், அவர்களது ஓய்வூதியம் 06/2006 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்று நிருபத்தின் அடிப்படையில் கணிப்பீடு செய்யப்படுகின்றது. 

இதற்கு மேலதிகமாக, 2016 ஜனவரி 01 முதல் 2018 டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியின் போது ஏறக்குறைய 71,000 ஓய்வூதியம் பெறுநர்கள் இளைப்பாறியுள்ளதுடன், அவர்களது ஓய்வூதியம் 03/2016 ஆம் இலக்க பொதுநிர்வாக சுற்றறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இளைப்பாறிய நேரத்தில் பெற்றுக் கொண்ட அடிப்படைச் சம்பளத்திற்கமைவாக கணிப்பீடு செய்யப்படுகின்றது. 

எனவே, 2016 ஜனவரி 1ஆம் திகதிக்கு முன்னர் இளைப்பாறியவர்களும் 03/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றுநிருபத்தின் கீழ் பல்வேறு மட்டங்களில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கு தகைமைபெற்ற அத்திகதிக்குப் பின்னர் இளைப்பாறியவர்களுக்குமிடையில் பெறும் ஓய்வூதியத்தில் முரண்பாடு காணப்படுகிறது. 

2019 ஜூலை 01 ஆம் திகதியிலிருந்து பயன்வலுப்பெறும் வகையில் இளைப்பாறும் காலத்தில் ஓய்வூதியம் பெறுநரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கு 03/2016 ஆம் இலக்க பொதுநிர்வாக சுற்றறிக்கையின் முதல் 2 கட்டங்களைச் சேர்ப்பதன் மூலம் ஓய்வூதிய திருத்தமொன்றினை முன்னெடுப்பதற்கு முன்மொழிவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஓய்வூதிய முரண்பாடுகளை திருத்துவதற்கு இவ்வருடத்திற்காக ரூபா 12,000 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழிவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 585,000 ஓய்வூதியம் பெறுநர்கள் நன்மையடைவர் எனவம் உதாரணமாக கீழ்படித் தரத்தையுடைய அரசாங்க ஊழியரின் ஓய்வூதியம் மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 1,600 ரூபாவினால் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தரம் ஏ ஐச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மாதாந்த ஓய்வூதியம் 4,600 ரூபாவினாலும் அமைச்சின் செயலாளர் ஒருவரின் ஓய்வூதியம் மாதாந்தம் 12,000 ரூபாவினாலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இத்திருத்தமானது 25 வருட சேவை மற்றும் 2015 டிசெம்பர் 31 இற்கு முன்னரான இளைப்பாறுதலினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்.