ஆஸ்கர் திரைப்பட விழாவுக்கு செல்லும் இந்தியாவின் நெப்கின் தயாரிக்கும் பெண்கள்




வயதுக்கு வந்தபோது ஸ்னேஹுக்கு 15 வயது. முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டு ரத்தம் கசியும்போது, தனக்கு என்ன நடக்கிறது என்று அவருக்கு புரிந்திருக்கவில்லை.
"எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என் உடலுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து அழத் தொடங்கிவிட்டேன்" என்கிறார் அவர். டெல்லிக்கு அருகில் உள்ள கத்திகேரா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு நான் சென்றபோது என்னிடம் இதனை அவர் பகிர்ந்து கொண்டார்.
"என் அம்மாவிடம் சொல்ல எனக்கு தைரியம் இல்லாததால், என் அத்தையிடம் சொன்னேன்."
"நீ இப்போது வளர்ந்துவிட்டாய். அழாதே. இது அனைவருக்கும் நடப்பதுதான்" என்று என்னிடம் கூறிய அவர், என் அம்மாவிடம் இதனை தெரிவித்தார்.
ஸ்னேஹுக்கு தற்போது 22 வயதாகிறது. தனது கிராமத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். `பிரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்`( Period. End of Sentence) என்ற ஆவணப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறார் ஸ்னேஹ்.
பெண்கள்
வடக்கு ஹாலிவுட்டில் உள்ள மாணவர் குழு ஒன்று நிதி திரட்டி இக்கிராமத்திற்கு நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ஸ்னேஹின் கிராமத்துக்கு இரானிய - அமெரிக்க இயக்குனர் ரய்கா செஹ்டப்சி வந்தார்.
டெல்லியில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள கத்திகேரா கிராமம். மால்கள், பெரும் கட்டடங்கள் என தலைநகரின் தாக்கம் சிறுதும் அங்கில்லை.
அக்கிராமத்தின் வயல்வெளிகள், பள்ளிக்கூடங்கள் என பல்வேறு இடங்களில் இந்த ஆவணப்படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளை போலவே, மாதவிடாய் ஏற்படும் பெண்களை வழிபாட்டு இடங்கள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இருந்து தள்ளி வைக்கும் பழக்கம் இருக்கிறது.
மாதவிடாயை ஏதோ ஒரு களங்கம் போல பார்க்கும் இந்த இடத்தில், தான் வயதுக்கு வராதவரை, இதுகுறித்து கேள்வியே படாமல் இருந்த ஸ்னேஹை பற்றி நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
"பெண்களுக்குள் கூட இதை பற்றியெல்லாம் பேசமாட்டார்கள்" என்று அவர் கூறுகிறார்.
மாத ஊதியமாக இப்பெண்கள் 2,500 ரூபாய் பெறுகிறார்கள்
Image captionமாத ஊதியமாக இப்பெண்கள் 2,500 ரூபாய் பெறுகிறார்கள்
ஆனால், சுகாதாரப் பிரச்சனைகளை களைய பணிபுரியும் Action India என்ற தொண்டு நிறுவனம், கத்திகேரா கிராமத்தில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலையை, அங்கு நிறுவிய பிறகு, பல விஷயங்களும் மாற ஆரம்பித்தன.
ஜனவரி 2017ஆம் ஆண்டு, அத்தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் சுமன் என்பவர் ஸ்னேஹிடம் வந்து, தொழிற்சாலையில் வேலை செய்ய விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார்.
என்றாவது ஒரு நாள் டெல்லி போலீஸில் பணிபுரிய விருப்பமுள்ள பட்டதாரியான ஸ்னேஹ், இதற்கு ஒப்புக்கொண்டார். எனினும், அக்கிராமத்தில் வேறு வேலைவாய்ப்பு ஏதுமில்லை.


"என் அம்மாவிடம் இதற்கு அனுமதி கேட்டபோது, அப்பாவிடம் கேள் என்று சொல்லிவிட்டார். எங்கள் குடும்பத்தில் அனைத்து முக்கிய முடிவுகளையும் ஆண்கள்தான் எடுப்பார்கள்" என்கிறார் ஸ்னேஹ்.