அதிபர் தரத்திலுள்ளோரை மாத்திரம் அதிபராக்குங்கள்!




( அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்கு தரம் பெற்ற அதிபர்கள் இல்லாமையினால் பாடசாலைகளின்  அபிவிருத்தி செயற்பாடுகள்  பாதிக்கப்பட்டு வருவதாக  பெற்றோர்கள் கவலை  தெரிவிக்கின்றனர். 

திருகோணமலை மாவட்டத்தில் 5 கல்வி வலயங்கள் காணப்படுவதாகவும் அதில் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கிண்ணியா, மூதூர், மற்றும் கந்தளாய் வலயங்கள் காணப்படுவதாகவும் அவ்வலயங்களிலுள்ள அதிகமான பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளும் கல்வி நடவடிக்கைகளும் பின்னோக்கி செல்வதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் தரம் பெற்ற அதிபர்கள் இல்லாமையினால் கடமை நிறைவேற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை வடக்கு கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இருந்தபோதிலும் கிண்ணியா, மூதூர் திருகோணமலை போன்ற வலயக்கல்வி பணிமனையின் கீழ் இயங்கி வருகின்ற  பாடசாலைகளுக்கு தரமற்ற அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கு  இதுவரை காலமும் தரம் பெற்ற அதிபர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

மத்திய கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்,எல்,ஏ, ஹிஸ்புல்லா பாடசாலைகளுக்கு  தரமுள்ள அதிபர்களை நியமிக்குமாறு  கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும், மாகாண கல்விப் பணிப்பாளருக்கும் கடிதம் மூலம் அறிவுரை வழங்கியும் தரமான அதிபர்களை நியமிக்கவில்லை எனவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர். 

எனவே திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு அதிபர் தரம் உள்ள அதிபர்களை நியமிக்குமாறு பெற்றோர்களும் புத்திஜீவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.