யாழ். பல்கலைக்கழக தொழிநுட்பப்பீடத்தில் பகிடிவதையைத் தொடர்ந்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக தொழிநுட்பப்பீடத்தின் அனைத்து மாணவர்களும் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக தொழில்நுட்பப்பீட வளாகம் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் உள்நுழைவதற்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பதற்றமடைந்து, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து உப விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்தபோது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளினால் உப விடுதிக் காப்பாளரை பேசியமையுடன், சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தொலைபேசியைப் பறித்துச் சென்றார். அவர் விடுதியினுள் கலகத்தில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை பிரதிப் பதிவாளர் ஒருவருமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்தபோது, பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் விரிவுரைகளுக்கு எதிராக சிரேஷ்ட மாணவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நேற்று மாலை தொழிநுட்பப்பீடத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் உள்நுழையா வண்ணம் துணைவேந்தரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பகிடிவதைக்ஜிகு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை.
இம்முறை பகிடிவதைக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை – சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை மாணவர்கள் மீதான உள்நுழைவுத் தடை நீக்கப்படமாட்டாது என அறியவருகின்றது.
Post a Comment
Post a Comment