டிரம்ப் – கிம் சந்திப்பது ஏன்?




தெற்கு வியட்நாமில், தனாங் நகரத்தில் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க துருப்புகள் வற்து இறங்கியது, தென்கிழக்கு ஆசியாவில் முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான வன்முறை போருக்கு வித்திட்டது.
கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அதே நகரத்தில் வியட்நாமின் முன்னாள் எதிரி நாடான அமெரிக்காவும், வியட்நாமின் பனிப்போர் காலக் கூட்டாளியான வடகொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
பிப்ரவரி 27 மற்றும் 28ல் வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது உறுதியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை நடக்கும் இடம் தனாங் அல்லது ஹனொய் நகரங்களில் ஒன்றாக இருக்கலாம்.

ஏன் வியட்நாம்?

முதலாளித்துவ பொருளாதாரத்தோடு, கம்யூனிச ஆட்சி நடக்கும் வியட்நாம், அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்குகிறது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இரு நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நடுநிலை நாடாக வியட்நாம் கருதப்படுவதாக கூறுகிறார் வல்லுநர் கார்ல் தாயெர்.
"ட்ரம்ப் - கிம் உச்சி மாநாட்டிற்கு வியட்நாமை தேர்ந்தெடுத்திருப்பதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம், வியட்நாமால் உச்சிமாநாட்டிற்கு தேவையான உயர் பாதுகாப்பு சூழலை வழங்க முடியும். எனவே வியட்நாமால் இந்த மாநாட்டை சிறப்பாக தொகுத்து வழங்க முடியும் என்று அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர்," என்றும் கார்ல் தாயெர் தெரிவித்தார்.
டிரம்ப் கிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வியட்நாம் நாட்டிற்கு கிம் ஒப்புக் கொண்டது ஏன்?

கிம்மிற்கு, சீனாவை போன்று வியட்நாமும் பாதுகாப்பான இடம்தான். இந்த இரு நாடுகளுமே, வடகொரியாவுடன் நல்ல உறவில் இருக்கக்கூடிய நாடுகளாகும்.
வியட்நாமுக்கு செல்வதால், வடகொரியா தனிமைப்படுத்தப்பட்ட நாடல்ல என்று நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகவே கிம் ஜாங்-உன் பார்ப்பார் என்கிறார் பேராசிரியர் தாயெர்.
வியட்நாமின் வளர்ச்சி மாதிரி குறித்து கிம் படித்துள்ளார். மேலும் அந்நாடு எப்படி மாறியிருக்கிறது என்று நேரில் பார்க்கும் வாய்ப்பை இந்த பயணம் அவருக்கு அமைத்துத்தரும்.
டிரம்ப் கிம்படத்தின் காப்புரிமைAFP
"அமெரிக்காவுடன் வியட்நாம் போரிட்டது, பின்னர் அதே நாட்டுடன் ஏற்பட்ட ராஜதந்திர உறவுகள், சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகள் போன்றவை எல்லாம், வடகொரிய தலைமையின் ஆர்வம் நிறைந்த விஷயங்கள்," என்றும் தாயெர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள வியட்நாம் நாட்டு வல்லுநரான லி ஹாங் ஹெய்ப் கூறுகையில், "வியட்நாமின் கதையை நேரில் சென்று பார்ப்பதற்கு கிம் ஆர்வத்துடன் இருப்பார். இது, வடகொரியாவை எவ்வாறு முன்னெடுத்து செல்ல முடியும் என்ற யோசனைக்கு உதவிகரமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.

வியட்நாம் நாட்டிற்கு டிரம்ப் ஒப்புக் கொண்டது ஏன்?

வியட்நாமின் பொருளாதார வெற்றி கிம்மை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தால், அது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையலாம்.
1986ல் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கியதில் இருந்து, ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக வியட்நாம் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு வியட்நாம் நாட்டிற்கு சென்ற அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பையோ, கிம் சரியான நேரத்தில் சரியாக செயல்பட்டால், இந்த அற்புதத்தை அவர் வடகொரியாவில் நிகழ்த்தலாம் என்று கூறியிருந்தார்.
2017ஆம் ஆண்டு, ஆசிய பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு வியட்நாமில் நடந்தபோது, அங்கு சென்ற டிரம்ப், வியட்நாமை சிறப்பான இடமாக உணர்வதாக கூறினார் என்று பேராசிரியர் தாயெர் தெரிவிக்கிறார்.
டிரம்ப் கிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
வியட்நாம் தன் ராஜதந்திர ஆற்றல்களை காண்பிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் ஆர்வமாக உள்ள இந்த சமயத்தில், வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க - வடகொரிய உச்சிமாநாடு அங்கு நடைபெறுகிறது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, உச்சி மாநாட்டிற்கு வியட்நாம் சரியான இடம் என்று தென்கொரிய அதிபர் அலுவலகமும் இதனை வரவேற்றுள்ளது.
"ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் ஏந்திய வியட்நாம், இன்று அதன் நட்பு நாடாக இருக்கிறது," என்று செய்தித் தொடர்பாளர் கிம் இயூ க்யோம் கூறியதாக யோன்ஹப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
"அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளும் புதிய வரலாற்றை படைக்க வியட்நாம் சிறந்த இடமாக இருக்கும் என்று நம்புவதாகவும்," அவர் தெரிவித்தார்.