வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் குழப்பம்




வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (25) திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் ஆரம்பமாக முன்னர் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சமூகம் தந்து, போராட்டத்திற்கு வருகை தந்த ஈ.பி.ஆர்.எல்.எப், கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட அரசியல் கட்சிகளை சார்ந்தோரை கைகொடுத்து வரவேற்று, போராட்டத்துக்கு தலைமை தாங்க முற்பட்டார்.
அவ்வேளை போராட்டத்தை ஒழுங்கமைத்தவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை பதாகைகளுடன் முன்னுக்கு வருமாறு அழைத்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அதனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை போராட்டத்துக்கு தலைமை தாங்கவோ, போராட்டத்தில் முன்னுக்கு நிற்கவோ ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கவில்லை.
அவ்வேளை திடீரென கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர், உறவுகள் கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளை மறைத்தவாறும் உறவுகளின் முன்பாக தாம் நின்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்பட்டுக்கொண்டு இருந்தனர்.
பின்னர் மக்கள் அங்கிருந்து ஐநா அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போதும் மக்கள் கைகளில் ஏந்தி வந்த பதாகைகளை மறைத்தவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தினை குழப்பும் விதமாக செயற்பட்டுக்கொண்டு இருந்தனர்.
அந்நிலையில் பேரணி டிப்போ சந்தியினை அடைந்த வேளை திடீரென குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சேர்ட் அணிந்தவர்கள் மக்களை வீதியில் உட்காருமாறு பணித்தனர். அதனால் குழப்பமடைந்த மக்கள் வீதிகளில் உட்கார்ந்தனர்.
இளைஞர்கள் மீது தாக்குதல்.
அவ்வேளை குறித்த பேரணிக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி கட்டியவாறு பேரணியை வழிநடத்தியும் கோசங்களை எழுப்பி சென்று கொண்டிருந்தவர்கள், திடீரென வீதியில் மக்கள் உட்கார்ந்தமையால், மக்களை வீதியில் உட்காராது தொடர்ந்து பேரணியாக நடக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.
அதனை அடுத்து குழப்பத்தில் ஈடுபட்டு வந்த கறுப்பு சேர்ட் அணிந்தவர்கள் நீங்கள் எங்களை வழிநடத்த வேண்டாம். என கூறி முச்சக்கர வண்டி சாரதி, அறிவிப்பை மேற்கொண்ட இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை அறுத்து அட்டகாசம் புரிந்தனர்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் குறித்த கறுப்பு சேர்ட் அணிந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்.
இவ்வாறாக போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு வந்த கறுப்பு சேர்ட் அணிந்த நபர்கள் தொடர்பில் செய்தியறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டனர்.
“போராட்டம் பின்னால் நடக்கும் போது ஏன் எங்களை படம் எடுக்கிறீங்கள்" போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படம் எடுங்கள் என மிரட்டினார்கள். அத்துடன் தொடர்ந்து ஊடகவியலார்களின் பணிக்கும் இடையூறுகளை விளைவித்து வந்தனர்.
அத்துடன், குழப்பத்தில் ஈடுபட்டவார்களை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை தமது தொலைபேசிகளின் படங்களை எடுத்து “ஒருத்தரும் கிளிநொச்சியை தாண்டி போக மாட்டீர்கள்" என ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அவர்களின் புகைப்படக் கருவிகளையும் தட்டிவிட்டு, ஊடகவியலாளர்களையும் தாக்க முற்பட்டார்கள்.
கறுப்பு சட்டையுடன் இவ்வாறாக குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் எனவும், தம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை குழப்பும் விதமாக பல தடவைகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், சுதந்திர தினத்தின் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திலும் இவ்வாறான குழப்பங்களை அவர்கள் செய்தனர் என பாதிக்கப்பட்ட உறவுகள் கவலையுடன் தெரிவித்தனர்.