(க.கிஷாந்தன்)
நாடாளுமன்றத்தில் கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், அதன் பெயர்களை வெளியிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்படியில்லாமல் வெறுமனே குற்றம் சுமத்துவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் எனவும் அதற்கு இடமளிப்பது தகுந்தது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
கித்துல்கல யட்டிபேரிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தினை 23.02.2019 அன்று பார்வையிட சென்ற அமைச்சரிடம் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சருடன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா மற்றும் பொறியிலாளர்கள் என பலரும் உடனிருந்தனர்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் செய்யும் எந்தவொரு விடயம் தொடர்பிலும் எதிர்கட்சிக்கு நம்பிக்கை இல்லை. கொக்கேய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி ஆராயும் குழுவின் தலைவராக நானே செயற்பட இருந்தேன். எனினும் அந்த விடயம் தொடர்பில் தேவையற்ற பிரச்சினை உள்ளதால், நான் சுயவிருப்பின் பேரில் அதில் இருந்து விலகினேன். செவ்வாய்கிழமை ஆகும் போது நம்பிக்கை இல்லை என கூறியவர்கள், எந்த அளவு நம்பிக்கை கொள்ள முடியும் என்பதை தெரிந்துகொள்வார்கள்.
ரஞ்சன் ராமநாயக்க கூறியது போல் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் என கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் எனக்கு தெரியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். ஒருவரேனும் போதைப்பொருளை பயன்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. அவ்வாறு பயன்படுத்துவார்கள் ஆயின் பெயர் குறிப்பிட்டு அதனை நிரூபிக்க வேண்டும்.அவ்வாறு இல்லாது நாடாளுமன்ற உறுப்பினர்களின் விம்பத்தை இல்லாது செய்வதற்கு இடமளிக்க முடியாது.
மேலும், புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆராய வந்ததோடு, அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துக் கொண்டேன். மேலும் இந்த உற்பத்தி நிலையத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி அவர்களிடம் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நஷ்டஈட்டு தொகையையும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அட்டனிலிருந்து சிவனொளிபாதமலைக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment