அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியான 90 மில்லியன் பேர் இதுவரை மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் குளிரை அனுபவித்து வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக 250 மில்லியன் அமெரிக்க மக்கள், "துருவ சுழற்சியால்" ஏற்பட்டுள்ள இந்த கடுங்குளிரை அனுபவித்து வருகின்றனர்.
அதிகப்படியான குளிரை எதிர்கொள்வதால் தோலில் ஏற்படுகின்ற காயங்களுக்கு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வார இறுதியில், வானிநிலை சராசரியைக் காட்டிலும் சற்று வெப்பமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்?
இந்த குளிரில் பொதுவாக வீடற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நகர் முழுவதும் வெதுவெதுப்பான தங்கு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஓஹியோவில் யாருமற்ற வீடு ஒன்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் குளிரில் உயிரிழந்தார்.
சிகாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்று குளிரால் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. அதில் பாதிபேர் வீடற்றவர்கள், பிற நபர்கள் தங்கள் வேலை காரணமாக வெளியில் சுற்றுபவர்கள்.
சிலர் தங்கள் வீடுகளில் இருந்து சிறிது தூரம் நடந்தவுடன் உயிரிழந்துள்ளனர்.
மிச்சிகனில் கடுங்குளிருக்கு தகுந்த சரியாக ஆடை அணியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
மைனஸ் 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் 18 வயது மதிக்கத்தக்க மாணவர் ஒருவர் தனது விடுதியில் இருந்து சிறிது தூரம் நடந்தவுடன் சுய நினைவை இழந்துவிட்டார். பின் அவர் மருத்துவனையில் உயிரிழந்தார்.
பல ஆபத்தான சாலைகளும் உயிரிழப்புகளுக்கு காரணம். பலர் பனி உறைந்த சாலைகளில் சிக்கி கொள்கின்றனர். வடக்கு இந்தியானாவில் காவல் துறையை சார்ந்த ஒருவரும் அவரது மனைவியும் பனி மூடிய சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர்.
மாறுமா வானிலை?
இந்த வானிலை வெள்ளியன்று சற்று மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார இறுதியில் சிகாகோவின் வெப்பநிலை 10 டிகிரி செல்ஷியஸாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த வார இறுதியில் வெப்பநிலை அதிகரிப்பது இதுவரை இல்லாத அளவு சட்டென மாறும் வானிலையாக இருக்கும் என வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் வானிலை சட்டென்று மாறுவதால் வெள்ள அபாயம் ஏற்படும் ஆபத்துக்கள் இருப்பதால் அமெரிக்க அவசர நிலை அதிகாரிகள் தயார்நிலையில் இருப்பதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தண்ணீர் குழாய்கள் வெப்பநிலை மாற்றங்களால் வெடிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மின்னசோட்டா என்ற இடத்தில் அதிகபட்சமாக மைனஸ் 48 டிகிர் செல்ஷியஸ் குளிர் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவருகிறது.
Post a Comment
Post a Comment