கிண்ணியா கந்தல்காடு பகுதிக்கு பலத்த பாதுகாப்பு




கிண்ணியா – கந்தல்காடு பிரதேசத்தில் இன்று (29) காலை இடம்பெற்ற பதற்ற நிலைமையின்போது கடற்படை வீரர்கள் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் நான்கு பேர் திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடற்படை வீரர்கள் சட்ட விரோத மணல் விற்னையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அதற்கு எதிராக ஒன்று திரண்ட குழுவொன்று படை வீரர்கள் மீது கல் வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். இந்த தாக்குதலிலேயே படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
தற்பொழுது கிண்ணியா – கந்தல்காடு பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மூதூர் மற்றும் சீனக் குடா பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடற்படை வீரர்களினால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் போது மகாவலி கங்கைக்குள் பாய்ந்து தப்பிச் சென்ற சட்டவிரோத மணல் வியாபாரிகள் இருவரைத் தேடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.