ஜனாதிபதியின் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் மலையக பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்




(க.கிஷாந்தன்)
ஜனாதிபதியின் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் மலையக பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு மலையக பகுதிகளிலும் மிகவும் வேகமாக போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எங்களுடைய மாணவர்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த விடயம் தொடர்பாக பெற்றோர்கள் மிகவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே நேரம் பொலிசாருக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே இதனை மலையகத்தில் இருந்து இல்லாதொழிக்க முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற மலையக பகுதிகளுக்கான பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலமாக கந்தப்பளை எஸ்கடேல் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் (25.01.2019) அன்று திறந்து வைத்தார்.
இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், வலய கல்வி பணிப்பாளர் பியதாச,பிரதேச சபை உறுப்பினர்கள், உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பாடசாலையின் அதிபர் வசந்த குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்த புதிய கட்டிடத்திற்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபட்டிருந்ததுடன் பாடசாலை உபகரணங்களுக்காக 8 இலட்ச ரூபா நிதியும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்,
மலையகத்தில் எதிர்வரும் சில மாதங்களில் பல பாடசாலை புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நான் இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நான் பாடசாலைகளில் அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியிருந்தேன். அதன் கட்டிட நிர்மாண வேலைகள் தற்பொழுது நிறைவடைந்து வருகின்றது.அவற்றை எனது தலைமையில் திறந்து வைக்குமாரு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருக்கின்றார்.மேலும் நான் தற்பொழுது வகிக்கின்ற விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் பாடசாலை அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.
இன்று நாட்டில் போதப் பொருளை ஒழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன பாரய முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதனை நான் வரவேற்கின்றேன். இந்த திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த வேண்டுமாக இருந்தால் பொலிசாருக்கு அதிகாரங்களை அதிகளவில் கொடுக்க வேண்டும்.
விசேடமாக மலையகத்தில் போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அதற்கென தனியான ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்தினால் மாத்திரமே இதனை இல்லாதொழிக்க முடியும். அதற்கு பெற்றோர்களினதும் மலையக இளைஞர்களினதும் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.