மலேசியாவில் இலவச உணவு கூப்பன்கள் பெறுவதில் நெரிசல்




இலவச உணவு கூப்பன்களை பெறுவதற்கு முண்டியடித்த கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் மலேசியாவில் இரண்டு முதிய பெண்கள் பலியாகியுள்ளனர்.
தலைநகர் கோலாலம்பூரில் புது மாவட்டத்தில் உட்புற சந்தை ஒன்றில் வழங்கயிருந்த மொத்தம் 200 இலவச கூப்பன்களுக்கு 1,000-க்கு மேற்பட்டோர் குழுமிருந்தனர்.
மக்களின் கூக்குரலை கேட்டதாகவும், மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து தள்ளியதை பார்த்ததாக பாதுகாப்பு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
78 வயதான லா லொன் நாங் மற்றும் 85 வயதான அக் போக் இருவரும் இலவச கூப்பன்கள் பெறுவதற்கான தங்களின் முறை வந்தபோது மூச்சுத்திணறி மயங்கியதாக நம்பப்படுகிறது.
"அடுத்த வாரம் வரயிருக்கும் சந்திர நாள்காட்டியின் படியான புத்தாண்டை முன்னிட்டு இந்த கூப்பன் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது" என்று இந்த சம்பவம் நிகழ்ந்த புது ஒருங்கிணைந்த வணிக வளாகத்தின் மேலாண்மை அதிகாரி "த ஸ்டார்" என்ற ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த இலவச கூப்பன்கள் முதியோருக்கு மட்டுமே வழங்கப்படுபவையாகும். இந்த நிகழ்வில் மொத்தம் 4 பேர் மயக்கமடைந்த்தாக அவர் கூறினார்.
இந்த இலவச கூப்பன்களை பெறுவதற்கு பதிவு செய்ய நான்கு, நான்கு பேராக மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டதாக 62 வயதான பாதுகாப்பு பணியாளர் தெரிவித்தார்.
"இருப்பினும், இந்த நெறிமுறையை வரிசையில் நின்றவர்கள் கண்டுகொள்ளாமல், ஒருவரையொருவர் முண்டியடித்து செல்ல தொடங்கினர்" என்று பெயர் தெரிவிக்காத இந்த பாதுகாப்பு பணியாளர் கூறியுள்ளார்.
இந்த இரு முதியோரின் உடல்கள் தரையில் கிடந்ததாக காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் ஷாஹாருதீன் அப்துல்லா உள்ளூர் ஊடகத்திடம் கூறினார்.
இன்னும் சில முதியோர் மூச்சித்திணறி துன்புற்றதாகவும் அப்துல்லா தெரிவித்தார்.