(க.கிஷாந்தன்)
கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் மூவர் பலத்த காயங்களுடன் கொட்டகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து கதிர்காமம் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று 26.01.2019 அன்று மதியம் 2.30 மணியளவில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அத்துடன் இவ்வாறு விபத்துக்குள்ளான லொறி அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
குறித்த வேனின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தினால் லொறி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், வேனில் பயணித்த இளைஞர் ஒருவர் மாத்திரம் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில், முச்சக்கரவண்டியில் பயணஞ் செய்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த முச்சக்கரவண்டி முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்படி இருவேறு விபத்துக்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment