"ஆரோக்கியமான நாடு - வளமான எதிர்காலம்" திட்டத்தில் திருகோணமலை புறக்கணிப்பு




( அப்துல்சலாம் யாசீம்)

ஆரோக்கியமான நாடு வளமான எதிர்காலம் திட்டத்தில் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய சுகாதார அமைச்சினால் இன்று (18) வெள்ளிக்கிழமை 2850 மில்லியன் ரூபாய் செலவில் 152 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணத்திற்கு 14 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 06 அம்புலன்ஸ் வண்டிகளும் அம்பாறை 03 மட்டக்களப்பு 04 திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 01 அம்புலன்ஸ் வண்டி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அருள் குமரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு
05 அம்புலன்ஸ் வண்டிகள்  மிகவும் அவசரமாக தேவைப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு  தெரியப்படுத்தியும் திருகோணமலைக்கு ஒரு அம்புலன்ஸ் வண்டி மாத்திரமே கிடைத்துள்ளது.

குறிப்பாக புல்மோட்டை தள வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை, பதவிசிறிபுர பிரதேச வைத்தியசாலை மற்றும் ஈச்சிலம்பற்று, தம்பலகாமம் போன்ற வைத்தியசாலைகளுக்கு மிக அவசரமாக அம்புலன்ஸ் தேவைப் படுகின்ற போதிலும் திருகோணமலை மாவட்ட மக்களை ஏமாற்றுவதற்காக ஒரே ஒரு அம்புலன்ஸ் வண்டி வழங்கப்பட்டிருப்பதாகவும் புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு கீழ் இயங்கிவருகின்ற  வைத்திய சாலைகளான கோமரங்கடவல, பதவிசிறிபுர, ஈச்சிலம்பற்று, புல்மோட்டை, தம்பலகாமம் போன்ற வைத்தியசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலும், விவசாயத்தை நம்பி விவசாய செய்கையில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில்  தூர இடங்களுக்கு சென்று தங்களது சுகாதாரச் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்  வாழும் மக்கள்  அதிகளவில்  திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் தங்களது அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஏழை நோயாளர்களின் வயிற்றில் அடித்துக்கொண்டு செயற்பட்டமையும், மத்திய அரசின் பிரதி சுகாதார அமைச்சராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் இருந்தபோதிலும் திருகோணமலை மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் திருகோணமலை புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே திருகோணமலை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்குவதற்கு மத்திய அரசாங்கமும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. ஹிஸ்புல்லா இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு புதிய அம்புலன்ஸ் வண்டிகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்களும், புத்திஜீவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.