எமது மக்கள் தொடர்பான கோரிக்கைகளை யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களுக்கே எமது வாக்குகளையும், ஆதரவையும் வழங்குவோம்.






(க.கிஷாந்தன்)
2019ம் ஆண்டு தேர்தல் ஆண்டாகும். இந்த தேர்தல் ஆண்டில் எந்த தேர்தல் நடந்தாலும், அதற்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டும் என தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஜனாதிபதி தேர்தல் ஒன்று வருமாக இருப்பின் எமது மக்கள் தொடர்பான கோரிக்கைகளை யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களுக்கே எமது வாக்குகளையும், ஆதரவையும் வழங்குவோம். மாறாக கோரிக்கைகளை ஏற்காதவர்களுக்கு நாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் 20.01.2019 அன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிட்டதட்ட 200 வருடங்களாக 8 அடி காம்பிராவில் வாழ்ந்து பழக்கப்பட்ட எமது மக்களுக்கு 2015ம் ஆண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 7 பேர்ச் காணியும் வழங்கி அதற்கான ஒப்பனையும் வழங்கப்பட்டு புதிய தனி வீடுகளையும் அமைத்து வாய்ப்பளித்துள்ளது. இதை ஒருபோதும் மக்கள் மறந்துவிடகூடாது.
இந்த அரசாங்கத்திற்கு வெளிநாடுகள் பல கடன்களை வழங்குகின்றனர். அந்த கடன்களை திருப்பியும் செலுத்தப்பட வேண்டும். ஆனால் இந்திய அரசாங்கம் நமக்கு கடன்களை வழங்குகின்றது. ஆனால் அதை திருப்பி செலுத்த வேண்டியது அல்ல.
வடக்கு, கிழக்குக்கு இந்திய அரசாங்கம் கூடுதலாக உதவிகளை செயடது வந்த நிலையில் மலையகத்திற்கும் உதவிகளை செய்கின்றார்கள். அந்தவகையில் வீடுகள், பாடசாலைகள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்திய அரசாங்கம் நமக்கு உதவிகளை செய்கின்றார்கள்.
எமது அமைச்சின் மூலமாக எதிர்வரும் காலத்தில் 7 தொடக்கம் 8 வரையிலான கிராமங்களை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற காத்திருக்கின்றது.
என்ன தான் வீடுகள் கட்டி கொடுத்தாலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்படும் சம்பள பிரச்சினையில் துரோகம் செய்து விடுகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் சட்டதரணி தம்பையா நீதிமன்றம் சென்றிருந்த போதிலும் அது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி அரசியல் அமைப்புக்கு எதிராக ஜனாதிபதி செயல்பட்டதையடுத்து மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக நீதிமன்றம் சென்ற வேளையில் நீதி கிடைத்தது. ஆனால் சம்பளம் தொடர்பான கொடூரமான ஒப்பந்தத்திற்கு நீதி கிடைக்கவில்லை.
கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியே வாருங்கள். கூட்டாக சேர்ந்து போராடுவோம் என தெரிவித்தால் அதற்கு இசையாத தொழிற்சங்கங்கள் பொறிமுறை தேவை என தெரிவிக்கின்றனர்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இவர்களுக்கு இருக்கும் ஆதாயம் காரணமாக இதை விட்டு வெளி வருவதற்கு இந்த பச்சோந்திகள் விருப்பமில்லை. கேட்டால் திகாவுக்கு அரசியல் தெரியாது என சொல்கின்றார்கள்.
இந்த பச்சோந்திகளின் தொழிற்சங்க பலத்தையும் குறைக்க வேண்டும். செத்தாலும் உங்களுக்காகவே சாவேன் என தெரிவித்த அமைச்சர் காசுக்கு துணைபோக மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இருபது ரூபாய்கும் 30 ரூபாய்க்கும் கெஞ்சி கொண்டு இருப்பதை விடுத்து கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியே வர வேண்டும். கூட்டாக சேர்ந்து போராடுவோம். இந்த வருடம் தேர்தல் வருடமாகும். மக்களுக்கு வழங்கிய ஆயிரம் ரூபாய் கோரிக்கையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இல்லையேல் 2015ம் ஆண்டு தேர்தல் காலத்தில் எவ்வாறு மக்கள் காட்டினார்களோ அதேபோன்று இம்முறையும் காட்டுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.