கிண்ணியா:துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து கடலில் குதித்தோர் மாயம்




கிண்ணியா கங்கைப் பாலம், கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். 

மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதனால் குறித்த இளைஞர்கள் மூவரும் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் தப்பித்துள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

கடற்படையின் அதிகாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காணாமல் போன இரு இளைஞர்களும் கிண்ணியா இடிமன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. 

காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொது மக்களுடன் சேர்ந்து கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். 

சம்பவ இடத்துக்கு பொலிஸார் உட்பட முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவ இடத்துக்கு துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹருப் மற்றும் அவரின் பிரத்தியேகச் செயலாளர் வைத்தியர். ஹில்மி முகைதீன் பாவா போன்றோர்கள் உடனடி விஜயம் செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் கடற்படை உயரதிகாரி, பொலிஸ் உயரிகாரிகளுக்கு சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் துப்பாக்கி சூட்டு நடத்திய படை அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

(திருகோணமலை நிருபர் பாறுக்)