புது வருடம் அனைத்து இலங்கை மக்களுக்கும் சவால் மிகுந்த ஒரு வருடமாகும்




பிறந்திருக்கும் புது வருடம் அனைத்து இலங்கை மக்களுக்கும் சவால் மிகுந்த ஒரு வருடமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாடும் நாட்டு மக்களும் புதிய நோக்கங்களுடன் திடசங்கற்பம் பூண்ட புது யுகத்தின் உதயமாகவே 2019 புது வருடம் பிறக்கிறது. புது வருடத்தினை அமோகமாக வரவேற்கத் தயாராகும் அனைத்து இலங்கை மக்களுக்கும் முதலில் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த வருடம் எதிர்நோக்கிய பாரிய சவால்களை முறியடித்து, மக்கள் இறைமையை உறுதிப்படுத்தியவாறு புது வருடத்தை வரவேற்க முடிகின்றமை நாமனைவரும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். இன, மத, கட்சி பேதமின்றி ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்வதற்காக அணிதிரண்ட உங்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது கௌரவபூர்மான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். 

அதிகார வெறி கொண்ட அரசியல் சூழ்நிலையில் கடுமையான சிரமங்கள் மத்தியில்கூட எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் நாம் சமூக, அரசியல் சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்டோம். நாகரீகமான, நீதி நியாயம் மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகள் எமக்கு பலத்தினையும் துணிச்சலினையும் வழங்கியமையினால் நாம் அரசியலமைப்புக்கு முரணான சூழ்ச்சியைத் தோல்விடையச் செய்தோம். 

பிறந்திருக்கும் புது வருடம் அனைத்து இலங்கை மக்களுக்கும் சவால் மிகுந்த ஒரு வருடமாகும். நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்பு நமது முன்பாக உள்ளது. அதற்காக உளப்பூர்வமாகவும், முறையாகவும், உற்சாகத்துடனும் அணிதிரளுமாறு இந்தப் புது வருடத்தில் உங்களனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.