(க.கிஷாந்தன்)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் வரலாற்று ரீதியில் பாரிய வெற்றியை அளித்துள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை காலமும் கிடைத்திராத 40 வீத சம்பள உயர்வு இம்முறை கிடைத்திருப்பதால் இது ஒரு பாரிய வெற்றி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.
கடந்த 3 மாதங்களாக சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்காக அணியப்பட்ட கறுப்பு ஆடை சம்பள உயர்வு வெற்றியின் பின் இன்று அகற்றப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் சம்பளம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடாகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த ஊடாகவியலாளர் சந்திப்பு 26.01.2019 அன்று கொட்டகலை சீ.எல்.எப் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
500 ரூபாய் அடிப்படை சம்பளமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை புதிய கூட்டு ஒப்பந்தத்தில் 200 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 40 வீத சம்பள உயர்வுடன் 700 ரூபாய் அடிப்படை சம்பளம் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் மேலும் ஒரு கொடுப்பனவாக 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாய் ஒரு நாள் சம்பளமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதி மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு உள்ளிட்ட தொகைகளுடன் 855 ரூபாய் சம்பள அதிகரிப்பு இம்முறை மக்களுக்கு கிடைக்கபெற்றுள்ளது.
தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு என்ற பேச்சில் ஆரம்பித்தமையால் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 750 ரூபாய்க்கு வருகை தந்தனர்.
அதேபோன்று 500 ரூபாய் அடிப்படை சம்பளத்திலிருந்து பேச்சை ஆரம்பித்த பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 750 ரூபாய்க்கு வந்தனர்.
ஆகையால் பாதிக்கு பாதி சம்பள உயர்வு விடயத்தில் பேச்சுவார்தைகள் இடம்பெற்று தொழிலாளர்களுக்கு 40 வீத சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதை விட உயர்வான சம்பளம் ஒன்றை தொழிலாளர்களுக்கு எவரேனும் பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் அவர்கள் முன்வரும் போது நாமும் ஆதரவு தருவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளம் தொடர்பில் கையொப்பம் இடப்படவுள்ளது. ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஒப்பந்தம் செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பின் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்பட்டது.
அதுவே தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் என்ற கையொப்பம் இடப்படவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்யப்படும் என சொல்லப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும்.
சிலர் அரசியல் இலாபம் கருதி இவ்வாறு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த புதிய ஒப்பந்தத்தில் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முடிவுற்ற கூட்டு ஒப்பந்த காலப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் காலம் வரையிலான நிலுவை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதற்கென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தேயிலை சபையின் ஊடாக 150 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார். அதற்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.
பேச்சுவார்த்தை என்பது சில விட்டுக்கொடுப்புக்கு மத்தியில் இடம்பெறும் ஒன்றாகும். தற்போது பெறப்பட்ட சம்பளத்திற்கு மேலாக இதுவரை யாரும் உயர்வாக சம்பளத்தை பெற்று தருகின்றோம் என்று சொல்லவில்லை.
அவ்வாறு பெற்றுக்கொடுக்க முன்வருவார்கள் என்றால் அவர்களை வரவேற்கின்றேன். 3 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முறையான பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததனால் இந்த 700 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்தது. இதற்காக தோட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைகழக மாணவர்கள், பொது அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் முன்னெடுத்தமைக்கும் நான் நன்றி சொல்கின்றேன்.
தோட்ட அதிகாரிமார் தோட்ட தலைவர்கள் வாலிப சங்க தலைவர்கள், தலைவிகள் உள்ளிட்ட பலரிடமும் அமர்ந்து பேசி ஒவ்வொரு காலப்பகுதியிலும் எந்தளவு தேயிலை கொழுந்து எந்தெந்த தேயிலை மலையில் பறிக்க முடியும் என்ற தீர்மானத்தை பெற்று முடிவுக்கு வந்தே கொழுந்து பறிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்பது பேச்சுவார்த்தையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தோட்ட கமிட்டிகள் முறையாக ஒழுங்காக செயல்பட்டாலே தோட்டத்தில் பாதி பிரச்சினை தீர்ந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment